ம.பி. ராஜ்யசபா தேர்தலில் திடீர் பரபரப்பு: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு.. பின்னணியில் ‘அந்த’ தெலுங்கானா வழக்கு!

Published On:

| By Mathi

Why Was Congress Meenakshi Natarajan’s RS Nomination Rejected

மத்திய பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் (Congress) வேட்பாளரான ‘தமிழரான’ மீனாட்சி நடராஜனின் (Meenakshi Natarajan) வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 3 ராஜ்யசபா எம்.பி. பதவி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெற உள்ளது. பாஜக 3 வேட்பாளர்களையும் காங்கிரஸ் 1 வேட்பாளரையும் நிறுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ம.பி. சட்டசபையில் கட்சிகள் பலம்

230 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 164 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.

ம.பி.யில் ஒரு ராஜ்யசபா எம்.பி. வெற்றி பெற 59 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. இதனடிப்படையில் ஆளும் பாஜகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் உறுதியாக கிடைப்பர்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் பாஜகவின் 49 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு மிச்சம் இருக்கும். அதனால் 3-வது வேட்பாளரையும் நிறுத்தி உள்ளது.

3-வது இடத்துக்கு காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு ம.பி. சட்டசபையில் மொத்தம் 61 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 61 எம்.எல்.ஏ.க்களும் அப்படியே வாக்களித்துவிட்டால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

ADVERTISEMENT

காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் (Meenakshi Natarajan)

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மீனாட்சி நடராஜன் அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர். மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் மீனாட்சி நடராஜனுக்கும் முக்கிய இடம் உண்டு.

மீனாட்சிக்கு கடும் எதிர்ப்பு

ஆனால் ம.பி. ராஜ்யசபா வேட்பாளராக மீனாட்சி நடராஜனை அறிவித்ததற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் ஞானசந்தானி கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜகவின் வியூகம்

இதனை பாஜக பயன்படுத்தி கொள்ள முனைகிறது. காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலரை வளைத்துப் போட்டால் பாஜகவுக்கு 3-வது ராஜ்யசபா எம்.பி.யும் கிடைத்துவிடுவார் என கள நிலவரம் இருந்தது. இதனால் எம்.எல்.ஏ.க்களை ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை பெங்களூரில் பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

மீனாட்சி வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு

இந்த பின்னணியில் இன்று ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தம் மீதான வழக்கு ஒன்றை மறைத்துவிட்டதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என பாஜகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை விசாரித்த தேர்தல் அதிகாரிகள், “தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் விவரத்தை மீனாட்சி நடராஜன் மறைத்துவிட்டதாக” தெரிவித்து அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

காங்கிரஸ் சொல்வது என்ன?

ஆனால் காங்கிரஸ் கட்சியோ, “மீனாட்சி நடராஜன் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) அல்லது குற்றவியல் வழக்கு எதுவும் இல்லை. மீனாட்சி நடராஜனுக்கு வந்தது 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் ஒரு சிவில் ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் (Show-cause notice) மட்டுமே. தேர்தல் ஆணைய விதிப்படி எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும், சாதாரண நோட்டீஸ்களை அல்ல என வாதிடுகிறது.

மீனாட்சிக்கு ‘வேட்டு’ வைத்த தெலுங்கானா வழக்கு என்ன?

  • பாஜக நீதிமன்ற ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த புகாரின்படி, இந்த விவகாரம் 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்குகிறது.
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஏ. ஸ்ரீலதா என்பவர், அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகியான ‘கும்பம் சிவக்குமார் ரெட்டி’ என்பவர் மீது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
  • இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளரான மீனாட்சி நடராஜன் தான் அடைக்கலம் கொடுத்து, தன் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாதுகாத்து வருகிறார் என்று ஏ. ஸ்ரீலதா குற்றம் சாட்டினார்.
  • காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி அன்று ஹைதராபாத் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ. ஸ்ரீலதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மீனாட்சி நடராஜன் 4-வது குற்றவாளியாக (Accused No. 4) சேர்க்கப்பட்டார்.
  • மீனாட்சி நடராஜன் மீது புதிய இந்திய தண்டனைச் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-வின் கீழ் 356, 61, 45, 46, 351(2), 3(5) மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மீனாட்சி நடராஜனுக்கு நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியது.
  • இதற்கு அக்டோபர் 24-ந் தேதி மீனாட்சி நடராஜன் தரப்பு வழக்கறிஞர் பதில் மனுத் தாக்கல் செய்து, “இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய் வழக்கு, இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். ஆனால், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம், விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதிர்ச்சியில் காங்கிரஸ் (CONGRESS)

மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிப்பு காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ம.பி. தலைநகர் போபாலில் சட்டசபை வளாகத்திலேயே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையிலான குழு புகார் கொடுத்தது. அத்துடன் போபாலில் இரவிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது, பாஜகவின் 3-வது வேட்பாளர் மகேஷ் கேவத்துக்கு போட்டி வேட்பாளர் யாரும் இல்லை. அதனால் அவரும் எளிதாக போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகும் சூழ்நிலை உள்ளது. எளிதாக பெற வேண்டிய 1 ராஜ்யசபா எம்.பி. இடத்தை கட்சி பறிகொடுத்துவிட்டதே என குமுறுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share