போலியான தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட்டு அதன் மூலம் பங்குசந்தையில் கோடிக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 6) குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அன்றைய தினமே முன்னணி ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அதாவது எக்சிட் போல் வெளியானது.
அனைத்து ஊடகங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 – 400 இடங்களை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 150 – 200 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தன.
எக்சிட் போல் எதிரொலியாக பிஎஸ்இ சென்செக்ஸ் 2,178 புள்ளிகள்- 2.94% உயர்ந்து 76,139 புள்ளிகளை எட்டியது, அதே நேரத்தில் நிஃப்டி 50 579 புள்ளிகள் – 2.57% உயர்ந்து 23,109 இல் வர்த்தகம் ஆனது.
இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் மூலம் பங்குச்சந்தையில் பாஜக பல ஆயிரம் கோடி முறைகேடு செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்குச்சந்தை குறித்து பேசியதை நாங்கள் குறிப்பிட்டோம். பங்கு சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
ஜூன் 4-ஆம் தேதிக்கு முன்பாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூறினர்.
பங்குசந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலீட்டு ஆலோசனை வழங்கியது ஏன்? முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா?
பங்குச்சந்தையில் முறைகேடு செய்ததாக செபி விசாரணை நடத்தி வரும் அதானி குழுமத்திற்கு சொந்தமான ஊடகத்திற்கு அமித்ஷா, மோடி இருவரும் ஏன் நேர்காணல்கள் கொடுக்கிறார்கள்?
எக்சிட் போல் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், போலியாக எக்சிட் போல் வெளியிட்ட நிறுவனங்களுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்கு சந்தை சரிந்து ரூ.30 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஐந்து கோடி சில்லறை முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்திய முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சிலர் சம்பாதித்துள்ளனர். பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அவர்களுக்கு உதவியுள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இது ஒரு மிகப்பெரிய மோசடி என்று உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.