”பதவிய காப்பாத்திக்கோங்க அண்ணாமலை” – அதிமுக தாக்கு!

Published On:

| By Kavi

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி குறித்து அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தோல்வியை சந்தித்தன.

இந்தநிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

மறுபக்கம் தேர்தல் தோல்வி விவகாரத்தில் அண்ணாமலைக்கு எதிராக தேசிய தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் “ராஜினாமா செய்யப்போறேன்” : அண்ணாமலை பரபரப்பு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையே அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “பா.ஜ.க. மாநிலத் தலைவர்களாக தமிழிசை சவுந்தரராஜன் எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பிரச்சினையின்றி நன்றாகத்தான் இருந்தது. அண்ணாமலை தலைவரான பிறகுதான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியில் பாஜக இருந்திருந்தால் 35 தொகுதிகள் வரை வென்றிருப்போம் ” என்று கூறியிருந்தார்.

வேலுமணிக்கு பதிலளித்த அண்ணாமலை, “எஸ்.பி.வேலுமணி பேசுவதை பார்த்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. பிரச்சினை ஆரம்பமாகியிருப்பதாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அதிமுக குறித்தோ பொதுச்செயலாளர் குறித்தோ, வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்!

ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சவுக்கு சங்கர் வழக்கு: டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உத்தரவு!

“எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே பிரச்சினை”: அண்ணாமலை பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.