இயக்குநர் பாரதிராஜா திரையுலகிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கும், அவருக்கும் செலுத்தும் மரியாதையின் நிமித்தமாக, தனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இது குறித்து நாளை காலை 9:30 மணி அளவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இயக்குநர் பாரதிராஜா இன்று காலமான நிலையில் நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தனது அறிவிப்பை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைப்பதாக ராகவா லாரன்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அறிவிப்பை வரும் வியாழக்கிழமை (11ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு வெளியிடுவதாக உங்களிடம் முன்பே கூறியிருந்தேன்.
தற்போது பாரதிராஜா சாரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. இந்த இழப்பு என் சொந்த குடும்ப உறுப்பினரை இழந்தது போல ஒரு ஆழமான வலியைத் தருகிறது. பாரதிராஜா சார் அவர்கள் திரையுலகிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கும், அவருக்கும் செலுத்தும் மரியாதையின் நிமித்தமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை (12ஆம் தேதி) காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
