திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அறிவிப்பை வரும் ஜூன் 11 வெளியிடுவேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 4 எல்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தவெக சார்பாக யார் திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னதாக திருமாவளவன் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில் அவர் வெளிப்படையாக மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகரும், சமூக செயல்பாட்டாளருமான ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் வரும் 11ம் தேதி முக்கியமான முடிவை அறிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “என்னைப் பற்றிய இந்த வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். தற்போது நான் ‘பென்ஸ்’ (Benz) திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். இந்தப் படப்பிடிப்பு வரும் ஜூன் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதனைத் தொடர்ந்து, எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அறிவிப்பை வரும் ஜூன் 11, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அறிவிப்புடன் Mattram (மாற்றம்) மற்றும் Service is god (சேவையே கடவுள்) ஆகிய ஹேஷ்டேகுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்ற பேச்சு அரசியல் மற்றும் திரைவட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்தில் அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறி வி த லீடர்ஸ் என்ற புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்து அதை கட்சியாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். அதே நாளில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்ற தனது இயக்கம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்களோடு கை கோர்க்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் வரும் ஜூன் 11 அன்று அவர் வெளியிடப் போகும் அறிவிப்பு அரசியல் வருகை குறித்தானதா அல்லது புதிய சமூக சேவை இயக்கம் குறித்தானதா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
