படிடா பரமா படிடா.. அப்பா இல்லையென்றால் நீங்கள் யார்? உங்க வரலாறு இதுதான் – விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா? என விஜய்யின் கடந்த கால நடவடிக்கைள் குறித்து அதிமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

இது குறித்து அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், “அட ஆச்சரியக்குறிகளே…

ADVERTISEMENT

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.

தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் அதிமுகவை தோற்றுவித்தவர்.

ADVERTISEMENT

மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.

வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.

ADVERTISEMENT

உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?

8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில், பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில், தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,

உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் நடிகர் விஜய்?

அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?

இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?

ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் போது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?

நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.

ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?

“கோட் சூட் போட்டோ ஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?

கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம். விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share