திமுக (DMK) தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதே தற்போது இல்லை என சிபிஎம் CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று ஜூன் 7-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை. சிபிஎம்மைப் பொறுத்தவரை தற்போது இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது.
மே 8-ந் தேதி சிபிஎம் மாநிலக்குழு கூடி, தவெக-வுக்கு ஆதரவு என முடிவெடுத்தது. அது சிபிஎம் கட்சி சுயேட்சையாக எடுத்த முடிவு. யாருடைய உத்தரவின் பேரிலோ, யாருடைய ஒப்புதலின் பேரிலோ அந்த முடிவை எடுக்கவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.
நாங்கள்தான் சிபிஎம், சிபிஐ கட்சிகளை தவெகவை ஆதரிக்க சொன்னோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அதேநேரத்தில், தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சனைகள், தமிழ்நாட்டுடைய மாநில உரிமைகள், மதச்சார்பின்மை பிரச்சனைகள்… இது போன்ற விஷயங்களில் ஒத்த கருத்துடைய பிரச்சனைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சேர்ந்து, இந்த கோரிக்கைகளுக்காக நாங்கள் சேர்ந்து போராடுவோம் என்பதை அன்றைக்கே சொல்லியிருக்கிறோம். அதே நிலைப்பாடுதான் இப்போதும் சொல்றோம்” என்றார்.
