பாஜகவுடன் சிபிஎம் ரகசிய கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு எம்.ஏ.பேபி காரசார கடிதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Congress

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை எதிர்த்துப் போராடி, வேறு எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு தியாகிகளைச் சந்தித்ததில்லை என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொடர்பு இருப்பதாகத் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தாவிட்டால் ‘இண்டியா’ கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் என அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து திருவனந்தபுரத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த எம்.ஏ.பேபி கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தை ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளேன். பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளின் பரந்த அளவிலான ஒருங்கிணைப்பை நாங்கள் விரும்புகிறோம்.

பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குள் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சூழல் வரலாம் என்பது உண்மைதான். ஆனால், நாம் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய சில குறைந்தபட்ச அரசியல் கண்ணியங்கள் இருக்கின்றன.

ADVERTISEMENT

சிபிஎம் கட்சிக்கும், ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டுவது முற்றிலும் அபத்தமானது. மக்களவையின் முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு, எதிர்க்கட்சிகளின் இந்த உள்கூட்டணிக்குள் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வன்முறை அரசியலை எதிர்த்துப் போராடி, சிபிஎம் கட்சி சந்தித்த தியாகிகளின் எண்ணிக்கையை விட வேறு எந்தக் கட்சியும் இங்கு தியாகங்களைச் செய்ததில்லை என்பதை அந்தக் கடிதத்தில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன். உண்மையில், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் கணிசமாகக் குறைந்ததன் காரணமாகவே அங்கு பாஜக வெற்றி பெற்று, தனக்கான இடத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதிலும், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்பதிலும் நாடாளுமன்றத்திற்குள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் சிபிஎம் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படும்.

அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரச்சினைகளின் அடிப்படையில் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவது குறித்து சூழலுக்கு ஏற்ப நாங்கள் முடிவெடுப்போம்.” என்றார்.

நாளை டெல்லியில் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்.ஏ.பேபியின் இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ஏற்கனவே இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share