திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், “நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. அதுகுறித்து விரைவில் விளக்கம் ஜூன் 11-ம் தேதி அளிக்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவை தொடர்ந்து ஒரு நாள் கழித்து ஜூன் 12ம் தேதி அரசியலுக்கு வரலாமா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று கேட்டு வெளியிட்ட வீடியோவிற்கு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ‘அன்போடு வாருங்கள், ஏன் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள், உடனே வாருங்கள்’ என்று உரிமையோடு அழைத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த அன்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், தான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளதாகவும், விரைவில் தனது ரசிகர்கள் அனைவரையும் அழைத்து, தனது அம்மாவை அந்த மேடையில் உட்கார வைத்து அந்த முடிவைச் சொல்லப் போவதாகவும் தெரிவித்தார். மேலும்,இன்று தன் வீடு தேடி வந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட லாரன்ஸ், நீங்கள் நினைத்தது கூடிய சீக்கிரம் நடக்க உள்ளது என்றார்.
தொடர்ந்து ‘நீங்கள் அரசியலுக்கு வரப் போகிறீர்களா இல்லையா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அந்த வீடியோவிற்கு வந்த கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் படித்தேன். நிறைய பேர் ‘வருவது என்றால் நேரடியாக வரவேண்டியதுதானே, ஏன் மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்’ என்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சும்மா சொல்லவில்லை. ஒரு சிலர் மக்களிடம் கேட்க மாட்டார்கள், ஆனால் நான் கேட்பேன். இது என்னுடைய ஐடியா. இவ்வளவு நாள் வீட்டில் அம்மாவிடமும் தம்பியிடமும், உறவினர்களிடமும் கேட்டோம்; இப்போது தாய்க்கு நிகராக என்னை நேசிக்கும் மக்களிடம் கேட்பதில் என்ன தவறு? அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் என்ன கெட்டுப் போகிறது? நான் இனி மக்களிடம் கேட்டு விட்டுத்தான் எதையும் செய்வேன்” என்றார்.
அடுத்ததாக, ‘கடந்த ஒரு மாத கால தமிழக வெற்றிக்கழக அரசு எப்படி நடக்கிறது?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ஒரு மாதமாக நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை அரசின் செயல்பாடுகள் மிகவும் நன்றாக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம், கோயில்கள் மற்றும் பள்ளிகள் முன்னால் இருக்கும் மதுக்கடைகளை மூடியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களைப் போலத்தான் நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர்களுக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஒரு புதிய இடத்திற்கு வாடகை வீட்டிற்குப் போனவுடன் பார்க்கும்போது நன்றாக இருக்கும், ஆனால் வீட்டிற்குள் போனால்தான் அங்குள்ள பிரச்சினைகள் தெரியும். அந்த ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மைப் பார்த்து ஆரம்பத்தில் கத்தும். ஒரு சாதாரண வீட்டிற்கே இவ்வளவு என்றால், ஒரு நாட்டை (மாநிலத்தை) அவர்களிடம் கொடுத்து இருக்கிறீர்கள். கொஞ்சமாவது டைம் கொடுங்கள். பாசிட்டிவாக யோசியுங்கள். புதிதாக அரசு வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்டீர்கள், இப்போது மாற்றம் வந்துவிட்டது. மாற்றத்திற்கு கொஞ்சமாவது டைம் கொடுக்க வேண்டாமா? என்னை பொறுத்தவரை அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் குறித்த கேள்விக்கு, “அதற்குக் காரணம் பொறாமைதான். விமர்சனங்களை நாம் வைப்பதற்கு முன், நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்துவிட்டு வைத்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்றார்.
மேலும், ‘திருச்சி கிழக்கில் நீங்கள் போட்டியிடப் போகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, “நான் முதலில் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பது குறித்து எனது அம்மா முன்னிலையில் தெரிவிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். அதன் பிறகு அது குறித்துச் சொல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “யாருடன், எந்த நேரத்தில், எப்படி வரவேண்டும், எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று நான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளேன். அதை கூடிய விரைவில் ரசிகர்கள் முன் சொல்வேன். நான் டிரஸ்ட் வைத்து நடத்திய போது எல்லா கட்சித் தலைவர்களிடமும் சென்று உதவி கேட்டுள்ளேன். எல்லோரும் எனக்கு எதிரி இல்லை, எல்லோரும் நண்பர்கள்தான். அதனால் எல்லோரிடமும் அறிவுரை வாங்கி, ஆசீர்வாதம் வாங்கி எனது முடிவைச் சீக்கிரமாக அறிவிப்பேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்.
தவெகவினரை தற்குறி என்று விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல. அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி” என்றும் ராகவா லாரன்ஸ் உறுதியாகத் தெரிவித்தார்.
