“ஒரே நாளில் ஒரு டன் அரிசியின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. தவெக அரசு இதுகுறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதற்கான பதிலை ஓட்டு போட்ட மக்கள் தான் தர வேண்டும். நாங்கள் தொகுதிக்குச் சென்று ஆய்வுகளைச் செய்கிறோம்; அதிகாரிகளிடம் பேசுகிறோம். இதுவரை எந்தவொரு புதிய டெண்டரும் விடப்படவில்லை, அடிப்படை வேலைகளைக் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆட்சி அமைந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகப்போகிறது.
இது ஒன்றும் சினிமா கிடையாது; வெறுமனே ‘சீன்’ போடுவதற்கோ, ரீல்ஸ் (Reels) செய்வதற்கோ, போட்டோஷூட் நடத்துவதற்கோ அல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சார்ந்த பிரச்சனை இது. எனவே, நிச்சயமாக இந்த அரசு மக்களின் வாழ்வாதாரத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். நாங்களும் அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்க்கப் பொறுத்திருக்கிறோம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “சட்டமன்றத்தில் நான் விருத்தாசலம் தொகுதி பிரச்சனையை மட்டும் பேசுவதில்லை; ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனைகளுக்காகவும் தான் குரல் கொடுத்து வருகிறேன். கர்நாடக அரசு ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம்’ என்று உறுதியாகச் சொல்லி வருகிறது. ஆனால், காவிரி நீரை நம்பியிருக்கும் நமது விவசாயிகளுக்காகத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
விவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கலில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அரிசி விலை உயர்வு
மக்கள் அன்றாடம் சாப்பிடும் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு டன் அரிசியின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசி ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ள நிலையில், சாதாரண ஏழை மக்களின் வாழ்க்கை என்னவாகும்?
அரசு இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். திரையரங்கில் உட்கார்ந்து சினிமா பார்த்து அழுதுகொண்டே சீன் ஓட்டுவது அரசு நிர்வாகம் ஆகாது. இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. அதேபோல் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை 717 கடைகளை மூடுவதாக சொன்னார்கள். உண்மையில் எத்தனை கடைகளை மூடி உள்ளனர்.
ரியல் ஹீரோ ஆக வேண்டுமா
இன்று தமிழ்நாடு முழுவதும் மின்சாரமே இல்லை. பல இடங்களில் மின்வெட்டு. மற்றொரு பக்கம் மின் கட்டண உயர்வு. ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாவது கையெழுத்தே இலவச மின்சாரம் என்று சொன்னார். முதலில் மின்சாரத்தை கொடுங்கள். மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்துங்கள். பிறகு நீங்கள் கொடுக்கும் இலவசங்களை அறிவியுங்கள். ஏனென்றால் மாற்றம் என்கிறார்கள். என்னை பொறுத்தவரை எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. கண்துடைப்புதான். அதனால் ரீல் ஹீரோ ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.” என்று காட்டமாக விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
