தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியானது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம், தணிக்கை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், முகமது பர்வேஸ் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ரோகிணி திரையரங்கில் நடிகை திரிஷா ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்கச் சென்றார்; இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், கோவையில் அமைச்சர்கள் சம்பத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இத்திரைப்படத்தைப் பார்த்தனர். கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் ‘கங்கா’ திரையரங்கிலும், அமைச்சர் விக்னேஷ் ‘போத்தனூர்’ திரையரங்கிலும் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். படத்தின் எண்ட் கிரெடிட்ஸ் (End credits) காட்சிகளின் போது அமைச்சர் சம்பத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார். அதேபோல, அமைச்சர் விக்னேஷும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், “ஜனநாயகன் எல்லா மக்களும் பார்க்க வேண்டிய படம். தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்கள் எல்லோருக்கும் சென்றுசேர வேண்டிய படம். மிகவும் நன்றாக உள்ளது. தளபதியின் படத்தில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும்; இந்தப் படத்திலும் ஒரு நல்ல மெசேஜ் உள்ளது. பல காலமாகத் தளபதியின் படங்கள் இது போன்ற போராட்டங்களுக்குப் பின்னர்தான் வந்துள்ளன. மக்களுக்கான வெற்றி எப்போதும் தளபதியால் கிடைத்துள்ளது. இது நல்ல படம், எல்லோரும் பாருங்கள்; சந்தோஷம்” என்றார். மேலும், ‘ஜனநாயகன்’ தளபதியின் கடைசிப் படம் என்பதால் மிகவும் எமோஷனலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
