Neet : Gen-Z புரட்சிக்கு தயாராகிட்டாங்க.. மெரினா பீச்சை ஒதுக்கிக் கொடுங்க – திருமுருகன் காந்தி ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

‘தமிழ்நாட்டில் Gen-Z புரட்சி வரும்’ என்று நீங்கள் தான் பேசினீர்கள். இப்போது அந்த Gen-Z தலைமுறையினர் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள். ஆனால் நீங்கள் எங்க சார் போனீர்கள்? என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன், “தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென ஏற்பட்ட தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 24) நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மே 17 இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து மே. 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

” ரோட்டிலிருந்து தான் காந்தியடிகள் போராடினார். அதனால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. ரோட்டிலிருந்து தான் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தையும் நடத்தினோம்; அதனால் தான் அந்த உரிமையும் கிடைத்தது. சாலை என்பது மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பொதுச்சொத்து, தனியார் சொத்து அல்ல. தனியார் சொத்தில் போய் போராட்டம் நடத்தினால் தான் தவறு. பொதுச்சொத்தில் நின்று தான் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடியும்.

ADVERTISEMENT

இல்லை என்றால், நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுங்கள்; எல்லாரும் அமைதியாகப் போராட்டம் நடத்துவார்கள். டெல்லி ஜந்தர் மந்தரில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம், அங்கு அனுமதி எதுவும் தேவையில்லை. அது போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அதுபோல ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுங்கள், நாங்கள் அமைதியாகப் போராட்டம் நடத்திவிட்டுச் செல்கிறோம்.

போராடுவதற்கு அரசே இடத்தை ஒதுக்காததால் தான், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் போராடுவதாகப் பேசுகிறீர்கள். இடத்தை ஒதுக்கிக் கொடுப்பது அரசின் வேலை. அந்த வேலையை நீங்கள் ஒழுங்காகச் செய்தால் மாணவர்கள் ஏன் சாலையில் உட்காரப்போகிறார்கள்? எனவே, நீட் தேர்வுக்கு எதிராகப் போராட மெரினா கடற்கரையை ஒதுக்கிக் கொடுங்கள்.

ADVERTISEMENT

கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நேரலை மற்றும் உங்கள் கட்சித் தலைவரின் திரைப்படங்களை மெரினா கடற்கரையில் திரையிடுகிறீர்கள். அப்படியிருக்கும் போது நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது? இதற்கெல்லாம் மெரினாவில் இடம் இருக்கும் போது, மாணவர் செல்வங்கள் போய் உட்காருவதற்கு இடம் இல்லையா?

கடந்த தேர்தலில், ‘தமிழ்நாட்டில் Gen-Z புரட்சி வரும்’ என்று நீங்கள் தான் பேசினீர்கள். இப்போது அந்த Gen-Z தலைமுறையினர் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள். ஆனால் நீங்கள் எங்க சார் போனீர்கள்? மாணவர்களை ஓட்டு போடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்துவீர்களா? அதற்கு மட்டும் தான் மாணவர்கள், இளைஞர்கள் தேவையா?

அதனால் போராடுவதற்கு மெரினா கடற்கரையை ஒதுக்கிக் கொடுங்கள். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தந்தை பெரியார் முழங்கியதும், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் பேசியதும் மெரினா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் தான். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தை ஏன் பூட்டி வைத்திருக்கிறீர்கள்? உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையைப் பூட்டி வைத்து, மக்களைப் போகக் கூடாது என்று சொல்லி ஏன் பயப்படுகிறீர்கள்?

கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளையும், உங்கள் தலைவரின் திரைப்படத்தையும் பார்க்கப் போகிறவர்களை விட, இங்குள்ள மாணவ இளைஞர்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share