தமிழக சட்டப்பேரவையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 53-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை இன்று பேசிய பிரேமலதா விஜயகாந்த், “53-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, உங்களது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பாகவும் எங்களது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “சட்டமன்றத்தில் அவைப்பணியாளர்கள் எல்லா பேரவை உறுப்பினர்களுக்கும் டம்பளரில் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நாம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். அவைப்பணியாளர்கள் ஒவ்வொரு மேஜையாகக் குனிந்து வந்து தண்ணீர் கொடுப்பதைப் பார்க்க ஒரு மாதிரி உள்ளது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளிலேயே தனித்தனியாகக் குடிநீர் பாட்டில்களை வைக்கலாம். இதனால் அரசுக்குப் பெரிய செலவுகள் எதுவும் வரப்போவதில்லை. நெகிழி பாட்டில்கள் வேண்டாம், கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் வைக்கலாம்” என்று கோரிக்கை வைத்தார்.
பிரேமலதாவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து அவையில் சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், “அண்ணியார் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த கருத்து ஏற்புடையதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அவையில் உறுப்பினர்களுக்குக் கோபம் வந்தால் அந்தத் தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி எறிய வாய்ப்பிருக்கிறது” என்றார்.
அதற்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “தண்ணீர் பாட்டிலைத் தான் வீச வேண்டும் என்று இல்லை; இப்போது கொடுக்கும் கண்ணாடி டம்ளரைக் கூட வீசி அடிக்கலாம்” என்றார்.
அப்போது அவையில் எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தண்ணீர் பாட்டிலை வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவேளை, அவரது கடந்த கால தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக அதை அவர் இங்கே குறிப்பிடுகிறாரோ என்று நான் அறிய விரும்புகிறேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டு சட்டமன்றத்தில் இருந்த முதல்வர், சபாநாயகர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.
பின்னர் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “காலையில் இருந்து அவையின் சூழல் மிகவும் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்தது. முதலமைச்சரின் பிறந்தநாளான இன்று, எல்லாரும் சந்தோஷமாக அவையை நடத்துவோம். பாட்டிலைத் தான் வீச வேண்டும் என்பதில்லை; வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால் இங்கு எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன, எதை வேண்டுமானாலும் வீசலாம். ஆனால், நமது எண்ணம் அதுவல்ல. பொதுவாகவே தண்ணீர் என்றாலே பிரச்சனைதான் போல, அது காவிரி தண்ணீராக இருந்தாலும் சரி, டாஸ்மாக் தண்ணீராக இருந்தாலும் சரி, எப்போதும் ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது” என்று கலகலப்பாகப் பேசினார்.
