அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பேட்டியளித்த பெண்கள் குறித்து, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக தற்போதைய அமைச்சர்கள் ராஜ்குமார் மற்றும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மார்ச் 26ஆம் தேதி அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடலூர் போலீசாரும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விளக்கம் அளித்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து குறிப்பிட்ட அந்தப் பேட்டி நீக்கப்பட்டுவிட்டது. இச்சூழலில், புகார் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னரும், புகார்தாரர்கள் அமைச்சர்களான பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்த நேர்காணலில் சமூக அவலங்களை விமர்சிக்கும் வகையிலேயே தான் பதிலளித்ததாகவும், பெண் சமூகத்திற்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கியிருந்தார். தனது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் திரித்துக் கூறி இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெகவினர் சிலர் தனக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக அளித்த புகாரின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
பொன்ராஜ் தரப்பு வாதம்
இந்த மனுக்கள் நீதிபதி ஜி. கேஇளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “ஏற்கனவே இது தொடர்பாக காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகும், புகார்தாரர்கள் அமைச்சர்களான பிறகும் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.
காவல்துறை வாதம்
மனுதாரர் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு எதிராக பேசியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வரும் ஜூன் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதுவரை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
