தமிழகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜூன் 28) நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ச. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.
இந்தியாவில் போலியோவை ஒழிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கமாக இருந்தது. இதன் காரணமாக, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 52.91 லட்சம் குழந்தைகளுக்குப் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுத்து அவர்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளையும் பரிசாக வழங்கினார்.
இன்று மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
