சேலம் மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சட்டத்திற்குப் புறம்பாக 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டம் அரியானூர் அடுத்த சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி அரியானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவிதாவிற்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே கடும் வறுமையில் வாடி வரும் இத்தம்பதியினர், நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுவோம் என அஞ்சியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு தங்களது பச்சிளம் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இது குறித்துத் தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் சிலம்பரசன், குழந்தையை விற்பனை செய்த சீனிவாசன் – கவிதா தம்பதியினரைத் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், குழந்தையை விலைக்கு வாங்கிய ராமநாதபுரம் தம்பதியினரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வறுமையில் வாடும் சீனிவாசன் – கவிதா தம்பதியினர் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே குழந்தையை விற்பனை செய்தார்களா? அல்லது இதற்குப் பின்னணியில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் புரோக்கர் கும்பல் ஏதேனும் செயல்பட்டு வருகிறதா? என்ற கோணத்தில் கொண்டலாம்பட்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறுமையின் காரணமாகப் பெற்ற தாயும் தந்தையும் தங்களது 7 நாள் குழந்தையையே 2 லட்ச ரூபாய்க்கு விற்ற இந்த துயரச் சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
