மதம் மாறினால் சாதி கிடையாது : தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த நீதிமன்றம்!

Published On:

| By Kavi

இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது என்று கூறி  2024-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என். சமீர் அகமது (முன்னர் என். பரமசிவம்). இந்துப் பெற்றோருக்குப் பிறந்த இவர், இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரையும் மாற்றியிருந்தார். கயத்தாரில் உள்ள சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் லெப்பை’ பிரிவின் கீழ் தனக்கு சாதிச் சான்றிதழ்  வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். இருப்பினும், கயத்தார் வட்டாட்சியர் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார். 

இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2022ல் மனு தாக்கல் செய்தார்.  ‘முஸ்லிம் லெப்பை’  என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்தசூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாக கருதப்படலாம் என்றும்; அவ்வாறு மதம் மாறும்போது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சமீர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் 2024 அரசாணை தொடர்பாக பதில் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில்,  ”முன்னேறிய வகுப்பிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவருக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC Muslim) அந்தஸ்து கிடைக்காது. ஆனால்,  தங்களின் அசல் மதத்தில் ஏற்கனவே இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று வந்தவர்கள் மட்டுமே, இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் காரணமாக அதனை இழக்க மாட்டார்கள். இதனால் சமூக சமநிலை பாதிக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பிபி பாலாஜி அமர்வு, ”ஒரு இந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது, அவர் ஒரு முஸ்லீமாக மட்டுமே மாறுகிறார். இஸ்லாமிய சமூகத்தில் அவருடைய இடம் அவர் மதம் மாறுவதற்கு முன்பு எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை என்று  கடந்த 1951-ஆம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏதேனும் ஒரு சாதி அல்லது உட்சாதியைச் சேர்ந்த நபர் இஸ்லாமிற்கு மாறும்போது, அவர் எந்தவொரு சாதியையும் சார்ந்தவர் என்ற நிலையை இழக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது.

சாதியைக் உள்ளார்ந்த அம்சமாகக் கொண்டுள்ள இந்து மதத்தைப் போலல்லாமல், தங்களின் மதங்கள் சமூக சமத்துவத்தை வழங்குகின்றன என்று கிறிஸ்தவ மிஷனரிகளும் இஸ்லாமிய போதகர்களும் பல தசாப்தங்களாக கூறி வருகின்றனர். 

மதமாற்றங்களை மேற்கொள்வதற்காக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு, இஸ்லாத்திலும் படிநிலை  உள்ளது என்று கூறுவது நேர்மையற்ற செயலாகும்.

சில பிரிவினரைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், மீதமுள்ளவர்களை முன்னேறியவர்கள் என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளைகளுக்கு எதிரானது ஆகும். இஸ்லாம் ஒரு சமத்துவச் சமூகத்தை உருவாக்க முயல்கிறது. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். அங்கு சமூக படிநிலை எதுவும் இல்லை. 

எனினும்  வரலாற்று காரணங்களால் இஸ்லாமிய சமூகமும் பல்வேறு பிரிவு வகுப்புகளை பெற்றுள்ளது.  அவை இந்து மதத்தில் உள்ள சாதியைப் போன்றது என்று  துணிச்சலாகக் கூடக் குறிப்பிடலாம்.

சாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல ஒருவர் பிறப்பால் மட்டுமே ராவுத்தர் அல்லது மரக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக இருக்க முடியும். ஒருவர் மதம் மாறுவதன் மூலம் ‘ராவுத்தர் முஸ்லிமாக’ மாறிவிட முடியும் என்று கூறுவது வேடிக்கையானது. 

ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே மாறுகிறார் என்று 75 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.  அன்றைய அமர்வு ‘வெறும் முஸ்லிம்’ என்ற சொல்லாடலையே பயன்படுத்தியிருக்கிறது

ஒருவர் பிறப்பால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பிரிவிலோ அல்லது சமூகத்திலோ அங்கமாக இருக்க முடியும் எனும் போது, அவரை மதம் மாறிய பிறகு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் வலுக்கட்டாயமாக வகைப்படுத்த முடியாது.

உயர் நீதிமன்ற அமர்வு கொடுத்த உத்தரவு நடைமுறையில் நீடிக்கும் போது, வெறும் ஒரு அரசாணையைப்  பிறப்பிப்பதன் மூலம் அதனை மாற்றிவிட முடியாது.

நீதிமன்றம் ஏற்கனவே ஒரு சட்ட விதியை தெளிவாக கூறியுள்ள போது, அரசு ஒரு அரசாணையைப் போட்டு அதை மாற்றிவிட முடியாது. நீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாது என்று அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. அதாவது அந்தத் தீர்ப்பின் வீரியத்தைக் குறைக்கும் வகையிலோ அல்லது அதனைச் சிதைக்கும் வகையிலோ ஒரு புதிய அரசாணையை பிறப்பிக்க மாநில அரசுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் தொடர்புடைய அரசாணை ஆகியவை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியல் சாதியிலிருந்து மதம் மாறியவர்கள் ஆகியோரை அந்த ஏழு இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ப்பதற்கு வழிவகை செய்கின்றன. சமூகப் படிநிலையில் மிகக் கீழ்நிலையில் உள்ள ஒரு பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இணையான நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் (OBC) பட்டியல் சாதியினரும் (SC) தனித்தனிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏதேனும் ஒரு வடிவில் தொடர்ந்து இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே, மாநில அரசு இத்தகைய முறையை மேற்கொண்டுள்ளது. இது,அரசு கையாண்ட இந்த அணுகுமுறையில் உள்ள உள்ளார்ந்த குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

தமிழக பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது”  என்று கூறி அரசாணையை ரத்து செய்தனர். 

மேல்முறையீடு செய்ய கோரிக்கை

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியா முழுவதும் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதிமன்றம் மூலம் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றும் பறிக்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மிக பெரிய அதிர்ச்சியாக..

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் BCM என சான்றிதழ் வழங்கும் தமிழ் நாடு அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக அரசு 2024ம் ஆண்டு பிப்.6-ம் தேதி பிறப்பித்த அரசாணை 31 ன் அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்.

அந்த அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறும்போது அவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ BCM என சான்றிதழ் வழங்கலாம்.

அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்தும் வகையில்தான் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளும் அமைந்துள்ளன.

இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் கடந்த ஆட்சிகளில் அரசுகள் கவனமாக செயல்பட்டுள்ளது.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அந்த நடைமுறை செல்லாது கடந்த திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம் என மதுரை உயர் நீதிமன்றம் கூறுவது.

நீதி கிடைக்கும் நீதிமன்றம் கூட முஸ்லிம்கள் என்றால் அநீதி இழைக்கும் அநீதி மன்றங்களாக மாறுவது சமீப கால தீர்ப்புகள் உத்தரவுகள் மெய்பித்து கொண்டே இருக்கிறது..

நீதிமன்றம் உத்தரவின் அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் மதம் மாறிய முஸ்லிம்கள் விசயத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் இப்படியான ஒரு அதி முக்கியமான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பே நீதிபதி சுவாமி நாதன் அவர்கள் இந்த வழக்கில் இந்த அரசாணையை ஏன் ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்புகிறார்.

அந்த நொடியில் இருந்து சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் உருவாகிறது என்பதை உணராத தவெக அரசு இந்த வழக்கில் அரசு சார்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோராதது தான் மிக பெரிய வேதனையை தருகிறது.

தமிழ் நாட்டில் முக்கியமான வழக்கை தவெக அரசு மிக அலட்சியமாக கையாண்டு இருக்கிறது என்பது தான் இதை காட்டுகிறது மேலும் இது குறித்து முதல்வரோ சிறுபான்மை நல துறை அமைச்சரோ பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சரோ இந்த வழக்கில் கவனம் செலுத்தாமல் இந்த வழக்கின் அவசியத்தை புரியாமல் நடந்து கொண்டது ஆளும் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை கேள்வி குறியாக்கி இருக்கிறது..

மேலும் வேதனையாக அரசின் சாசன பிரிவு வழக்கறிஞர்கள் சட்ட வல்லுநர்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் ஆன்லைன் மூலம் பதில் அளித்தது இந்த வழக்கின் விசாரணையின் தீவிரத்தை அரசு உணர வில்லை என்பதை தான் காட்டுகிறது.

நீதிமன்றம் மூலம் இழைக்கப்பட்ட அநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கும் அபத்தமான செயல்..

இந்த வழக்கில் அலட்சியமாக இருந்து தவெக அரசின் நிலைப்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..

சமூக நீதி பேசும் தவெக அரசு சிறுபான்மை மக்களுக்கு அனைத்து உரிமைகளும் பெற உறுதுணையாக இருப்போம் என கூறும் தவெக அரசு உடனடியாக நீதிமன்ற உத்தரவை குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும் உடனடியாக சட்ட வல்லுநர்கள் மூலம் இந்த உத்தரவு குறித்து ஆராய்ந்து உடனடியாக உச்ச நீதிமன்றம் மூலம் நீதியை பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த விவகாரத்தில் தமிழக அரசு, சமூக நீதியைக் காக்கும் பொருட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share