பள்ளிகளிடம் ரூ100 கோடி மோசடி.. மாஜிஸ்திரேட் முன் இன்று பி.டி. அரசகுமார் ஆஜர்!

Published On:

| By Mathi

Rs. 100 Crore School Fraud: PT. Arasakumar to be produced before magistrate today

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் இன்று ஜூன் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார் என்கின்றன போலீஸ் தகவல்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு, தனக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி பள்ளி அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகவும் கூறி, பி.டி. அரசுக்குமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பி.டி. அரசுக்குமார் (வயது 59) என்பவரை, தியாகராய நகரைச் சேர்ந்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சிறப்புப் படை நேற்று ஜூன் 27-ந் தேதி கைது செய்தது.

இளங்கோவன் அளித்த புகாரின்படி, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) போன்ற அமைப்புகளிடமிருந்து அனுமதி பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டன. ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த பி.டி. அரசகுமார் இந்த அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இருக்கிறார்.

ADVERTISEMENT

பல பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட வாக்குறுதி அளித்தபடி அனுமதிகளைப் பெற்றுத் தரவும் இல்லை, பணத்தைத் திரும்பவும் வழங்கவில்லை. இதன் மூலம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையர் பி.சி. தேன்மொழி மேற்பார்வையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் வி.இ. செந்தில் தலைமையிலான சிறப்புப் படையினர், நேற்று பி.டி. அரசகுமாரைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமார் விசாரணைக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share