சோனியா, ராகுல் வீட்டை போலீஸ் சுற்றி வளைப்பு:  என்ன நடக்கிறது டெல்லியில்?

Published On:

| By Aara

நேஷனல்  ஹெரால்டு வழக்கில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை  மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் உச்சகட்டமாக சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் இன்றோ, நாளையோ கைது செய்யப்படலாம் என்ற தகவல் காங்கிரஸ் வட்டாரத்தையும், தேசிய அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியிருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக  சோனியா, ராகுல் ஆகியோரை நேரடியாக அழைத்து அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் டெல்லி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்  போராட்டம் நடத்தினார்கள்.

போராடிய காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்தது டெல்லி போலீஸ். அடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸுக்குச் சொந்தமான ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியா  வளாகத்தை,  அமலாக்க இயக்குனரகம் இன்று  (ஆகஸ்டு 3) சீல் வைத்தது.

இந்த நிலையில்  டெல்லி ஜன்பத் சாலையில்  உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டைச் சுற்றியும், அக்பர் சாலையில் உள்ள  காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றியும் டெல்லி போலீஸார் அதிக எண்ணிக்கையில் இன்று மாலை முதல் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தியின் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிக்கப்படுகிறது. இந்த இடங்களைச் சுற்றி போலீஸ் பேரி கார்டுகள் போடப்பட்டு  வெளிப் பகுதியில் இருந்து அங்கே யாரும் நுழைய முடியாத படி போலீஸ் தடுத்து  வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் மற்றும்  ராகுல், சோனியாவின் இல்லம் ஆகியவற்றை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் திரளலாம் என்பதால் போலீஸார் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சிலர் கூறுகின்றனர்.  ஆனால் இன்று மாலை முதல் பாதுகாப்பை பலப்படுத்தி அந்த பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் திரள்வதைத் தடுத்துவிட்டு அதிகாலையிலோ நாளையோ சோனியாவையும், ராகுல்  காந்தியையும் கைது செய்யும் திட்டமும் அமலாக்கத்துறைக்கு இருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பான தகவல் உலா வருகிறது.

அமலாக்கத்துறையின் சீல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது காங்கிரசாரை பயமுறுத்துவதற்கான ஒரு தந்திரம். ஆனால் காங்கிரஸார் பயப்பட மாட்டார்கள். அவர்கள் கிளர்ச்சியில் எழுவார்கள்” என்று கார்கே கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மக்கன்,  அபிஷேக் மனு சிங்வி ஆகியோர்,   “விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, ஜிஎஸ்டி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு இல்லாமல், பண வீக்கம் என மத்திய அரசு நிர்வாக ரீதியாக தோல்வி அடைந்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டம் காரணமாக விவாதம் நடந்தது.

இந்தப்  பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு நினைக்கிறது. இது ஒரு திசை திருப்பும் தந்திரம்” என்றார். ராகுல் காந்தி இன்று கர்நாடகாவில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.

சோனியா, ராகுல் இல்லம், காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி மாலையில் தொடங்கிய போலீஸ் குவிப்பு இன்று இரவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்  காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள்,  எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு செல்ல விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

இரவுக்குள் ஏதும் சம்பவம் நடக்குமோ என்ற பரபரப்பில் இருக்கிறது டெல்லி.

வேந்தன்

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share