தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி 5 இடங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. அதில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாக்குறுதிகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் ஆட்சி அமைத்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், மயிலாடுதுறையில் அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநிலக் குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 31) நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுருளிராஜன், மாநில துணைத்தலைவர் அமிர்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில், அரசு ஊழியர்களை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறி தமிழக நிதியமைச்சரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கூறியுள்ள ஆர்.சண்முகராஜன் , “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக நிதியமைச்சரைக் கண்டித்து திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதுதவிர, வருகிற 8ஆம் தேதி அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
நிதித்துறை சீர்திருத்தமும் நிலைகுலைந்த இந்தியாவும் : பகுதி 3
Comments are closed.