பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Modi) வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாராட்டுத் தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
நேருவின் சாதனை முறியடிப்பு (NEHRU)
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 4,399 நாட்கள் பதவி வகித்து சாதனைப் படைத்துள்ள அவர், 1952 முதல் 1964 வரை தெரடர்ந்து 4,398 நாட்கள் பிரதமராகப் பணியாற்றிய ஜவஹர்லால் நேருவின் முந்தைய சாதனையைக் கடந்துள்ளார்.
இந்தியாவின் ஜனநாயக விழிப்புணர்வு, மக்களின் நம்பிக்கை, மக்கள் பங்கேற்பின் சக்தி ஆகியவற்றின் அடையாளமாக இந்நிகழ்வு திகழ்வதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சாதனையுடன் அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 12 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளதையும் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையையொட்டி அமைச்சரவையில் பாராட்டுக்களும் நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
மோடி ஆட்சிக் கால சாதனைகள்
ஏழைகளின் நலன், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மேம்பாட்டிற்காக அவரது தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் 25 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வர காரணமாக இருந்த பிரதமரின் கொள்கைகளை பாராட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
தேசத்திற்கு சேவையாற்றுவதில் அவர் காட்டிய இணையற்ற அர்ப்பணிப்பு, அயராத உழைப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவரது தலைமைக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட உறுதிப்பாடு, தலைமைத்துவத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதாக மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
