’பெரியார் அறிவுலகம்’ நூல்கள்.. திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் சரமாரி குற்றச்சாட்டு! திரிஷா விஜய், சங்கீதா, சிக்மா எல்லாமே சதி என புகார்!

By Mathi

|

Published on 7 Nov 2026, 5:19 PM

Periyar Arivulgam-Rajmohan

கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், முந்தைய திமுக ஆட்சி மீது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திரிஷா விஜய், சங்கீதா உள்ளிட்ட பெயர்களில் வெளியானதாகக் கூறப்படும் நூல்கள், சிக்மா பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள் தொடர்பான விவகாரம், தவெகவுக்கு எதிராக திமுகவினர் திட்டமிட்டுச் செய்த அரசியல் சதி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (நவம்பர் 7) செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: பெரியார் அறிவுலகம் நூலக விவகாரத்தில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திமுக ஒரு மாபெரும் ஊழலைச் செய்திருக்கிறது. இது போன்ற செயற்கை நுண்ணறிவு ஊழல் இதற்கு முன்பு நடந்ததில்லை. இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆதாரங்களுடன் உங்கள் முன்னிலையில் விளக்குகிறேன்.

ADVERTISEMENT

பிப்ரவரி 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கொள்முதல் ஆணை

முதலில் அகல் விளக்கு பதிப்பகம் தொடர்பான ஆவணத்தைப் பாருங்கள். அந்தப் பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கு முந்தைய திமுக அரசு 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கொள்முதல் ஆணை வழங்கியிருக்கிறது. அந்தப் புத்தகங்களை 7 நாட்களுக்குள் கோவை பெரியார் அறிவுலகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் கொள்முதல் ஆணையின் பிரதிதான் இது. திமுகவுக்காகப் பேசுபவர்களுக்குத் தெம்பும் திராணியும் இருந்தால் இதற்குப் பதில் சொல்லட்டும்.

பிப்ரவரி 14-ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதியையும் காட்டுகிறேன். குப்பையில் கூட வைக்கத் தகுதியற்ற, அபத்தமான உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்களைப் பல்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வாங்கி, 7 நாட்களுக்குள் வழங்குமாறு திமுக ஆட்சியில் உத்தரவிட்டதற்கான ஆவணம் இது.

ADVERTISEMENT

அந்த உத்தரவின்படி, 40-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் புத்தகங்கள் பெரியார் அறிவுலக வளாகத்துக்கு வந்துள்ளன. தேர்தல் பணிகள் முடிந்த பிறகு, முதலமைச்சர் தலைமையில் நூலகத் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளின்போது, அந்தப் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கொள்முதல் ஆணைப்படி புத்தகங்கள் வந்துள்ளன என்பதற்காக அப்போது முத்திரையிடப்பட்டுள்ளது. அது நடந்தது ஜூன் மாதத்தில்.

ஆனால், ஜூன் மாதத்தில் முத்திரையிடப்பட்ட புகைப்படத்தை மட்டும் காட்டி, எங்களைப் பற்றி திமுகவின் ஆதரவாளர்கள் அவதூறு பரப்புகிறார்கள். மனசாட்சியில்லாமல் இப்படிப் பேசுகிறார்கள். மனிதனுக்கு வெட்கம் என்பது இருக்க வேண்டும். பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயத்தைச் செய்துவிட்டு, எந்த வெட்கமும் இல்லாமல் எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்.

ADVERTISEMENT

புத்தகங்களைக் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது பிப்ரவரி 14-ஆம் தேதி. 7 நாட்களுக்குள் அவற்றை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த உத்தரவின்படி பெட்டிகள் வளாகத்துக்கு வந்தன. பின்னர் அலமாரிகளில் அடுக்கப்பட்டபோது முத்திரையிடப்பட்டது. இதற்கான மின்னஞ்சல் பரிமாற்றங்களும் என்னிடம் உள்ளன.

பிற நூலகங்களுக்கும் புத்தகங்கள் கொள்முதல்

இந்த விவகாரம் கோவை பெரியார் அறிவுலகத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக நான் குற்றம்சாட்டும் இத்தகைய புத்தகங்கள், திறப்புக்குத் தயாராக உள்ள திருச்சி காமராசர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதேமில்லத் அறிவுலகம் ஆகிய நூலகங்களுக்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலகத்துக்கும் தலா ரூ.50 கோடி செலவிடப்படுகிறது. நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இணையவழி மின்னூல்கள் வாங்குவதற்குத் தனியாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டமிட்டு திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியிருக்கிறது என்பதே எனது குற்றச்சாட்டு. இதற்கான ஆணைகளையும் காட்டியுள்ளேன்.

137 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழு

ஜனவரி மாதத்தில் நூல் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்தக் குழுவில் ஏறத்தாழ 137 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 112 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவை அனைத்தும் திமுக ஆட்சியில் நடந்தவை. அந்தக் குழுவினர் புத்தகங்களைப் பரிந்துரைத்துள்ளனர். இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு உயர்நிலைக் குழுவும் இருந்துள்ளது. திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அந்தக் குழுக்களும் ஒப்புதல் அளித்ததாகக் குற்றம்சாட்டுகிறேன்.

கோவை நூலகம் மட்டுமல்ல; கன்னிமாரா நூலகத்திலும் அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் புத்தகங்கள் என்று அழைப்பதற்கே ஒரு வாசகனாக வேதனைப்படுகிறேன். தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருக்கிறது.

பணம் எப்போது விடுவிக்கப்பட்டது என்று கேட்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. திமுக ஆட்சியிலேயே மார்ச் மாதம் 14-ந் தேதியே கருவூலத்திலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்குப் பணம் விடுவிக்கப்பட்டதற்கான செயல்முறை ஆணை உள்ளது. கொள்முதல் ஆணை பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது. குழு ஒப்புதல் அளித்ததும், புத்தகங்களை வாங்க உத்தரவிட்டதும் திமுக ஆட்சியில்தான். மார்ச் மாதத்தில் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி, நிலுவைப் பணத்துக்கான நடைமுறைகளை மேற்கொண்டோம். அப்போதுதான் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களின் பெயர்கள் கவனத்துக்கு வந்தன.

நூல்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்கள்

தாமரை முரளி என்பவர் 100 புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்தத் தாமரை முரளி? தாமரை ரவி என்பவர் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. தாமரை பன்னீர் என்ற பெயரிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. மோனிகா ரவி, ஐஸ்வர்யா, ஜோதி ஹரரன், லட்சுமி மோகன், கமலம்பாள் கருணாநிதி எனப் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த எழுத்தாளர்களை யாராவது கண்டுபிடித்தால் தயவுசெய்து அழைத்து வாருங்கள். பவித்ரா கருணாநிதியை யாராவது கண்டுபிடித்துத் தந்தால் தக்க சன்மானம் வழங்கலாம். ஸ்டாலின் கண்டுபிடித்துத் தந்தால் பதக்கமே வழங்கலாம்.

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். நூல் தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியல்தான் ஆதாரம். எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படுத்திய சர்ச்சைக்குரிய புத்தகங்களின் தலைப்புகள் அனைத்தும் அந்தப் பட்டியலில் உள்ளன. பதிப்பகங்கள் வழங்கிய பட்டியலிலிருந்து குழு பரிந்துரைத்த நூல்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அந்தக் குழுவில் மதிப்பிற்குரிய அறிஞர்கள் பலரும் இருந்திருக்கிறார்கள்.

‘நாலடியார்’ நூலில் உள்ள பிழை

செயற்கை நுண்ணறிவைப் பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இவர்கள் எதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்ற நூலைப் பாருங்கள். நாலடியார் என்பது ஒரு இலக்கியத் தொகுப்பு. ஆனால் அந்த நூலில் நாலடியாரை ஒரு தத்துவ ஞானியாகவும், மிகச் சிறந்த மனிதராகவும் எழுதியிருக்கிறார்கள். இதைப் படிக்கும் மாணவர்கள் தேர்வில், ‘நாலடியார் மிகச் சிறந்த மனிதர்; அவரைப் போன்ற மனிதரைப் பார்க்க முடியாது’ என்று எழுதினால் என்ன ஆகும்? செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட அபத்தமான உள்ளடக்கம் இது.

தாமரை, விஜய், கருணாநிதி, ஸ்டாலின் போன்ற பெயர்களில் போலியான எழுத்தாளர்களை உருவாக்கி நூல்கள் வெளியிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறேன். முதலமைச்சரின் பெயர் தொடர்பான சர்ச்சைக்குரிய புத்தகங்களும் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டின் நூலகங்களுக்குள் திமுக ஆட்சியில் ‘டிஜிட்டல் கரையான்களை’ அனுப்பியிருக்கிறார்கள். திருச்சி காமராசர் நூலகத்துக்கும் இத்தகைய புத்தகங்களை வாங்குமாறு திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு குழு; லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து நூலகங்களுக்கு வந்த புத்தகங்களைத் தனியாகப் பாதுகாத்து வைக்க வேண்டும். அவை விசாரணைக்கான ஆதாரங்கள். எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது, பிப்ரவரியில் கொள்முதல் ஆணை எவ்வாறு வழங்கப்பட்டது, மார்ச் மாதத்தில் கருவூலத்திலிருந்து பணம் எவ்வாறு விடுவிக்கப்பட்டது என்பதையெல்லாம் விசாரிப்போம். முறைகேடாகச் செலுத்தப்பட்ட ஒவ்வொரு ரூபாயையும் திரும்பப் பெறுவோம்.

திருச்சி காமராசர் நூலகம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளிட்ட அனைத்து நூலகங்களிலும் இத்தகைய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்யச் சிறப்புக் குழு அமைக்கப்படும். செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் நூல்களையும், அவற்றின் கொள்முதலில் நடந்த முறைகேடுகளையும் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்துவோம். இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி எங்கள் துறை சார்பில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சொல்வதைப் போல, ஒரு ரூபாயைக்கூட யாரும் முறைகேடாகத் தொட அனுமதிக்க மாட்டோம். முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் விடமாட்டோம்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தப் புத்தகங்களைக் கொடுப்பீர்களா?

இந்தப் புத்தகங்களை உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் படிக்கக் கொடுப்பீர்களா? யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் எத்தனை மாணவர்கள் நூலகங்களுக்கு வருகிறார்கள்! பெரியார் பெயரில் நூலகம் கட்டியதாகப் பெருமை பேசும் திமுகவினரிடம் கேட்கிறேன்: இப்படிப்பட்ட புத்தகங்களை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பீர்களா?

மாணவர்கள் இவற்றைப் படித்துவிட்டுத் தேர்வு எழுதினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும்? இங்கு பாதிக்கப்படுவது பணம் மட்டுமல்ல; மாணவர்களின் அறிவைப் பெறும் உரிமையும்தான். அதைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வளவு பெரிய முறைகேட்டுக்குப் பிறகும் எப்படிக் கூச்சமின்றிப் பேசுகிறீர்கள்?

திமுக தமிழ்நாட்டு மாணவர்களிடமும் வாசகர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய ஊழலைச் செய்ததாகக் குற்றம்சாட்டுகிறேன். இதில் சட்டரீதியாகவும் காவல்துறை மூலமாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொள்முதல் ஆணையும் புத்தகங்களுக்கு இடப்பட்ட முத்திரையும்

மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். திமுகவினர் விவகாரத்தைத் திசைதிருப்ப முயன்று தங்களுக்குத் தாங்களே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். புத்தகங்களை எப்போது கொள்முதல் செய்தோம், கருவூலத்திலிருந்து எப்போது பணம் விடுவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கும்போது, கொள்முதல் பட்டியலுடன் சரிபார்த்து முத்திரையிடுவார்கள். முத்திரையிட்ட தேதியை வைத்து கொள்முதல் செய்த ஆட்சியை மாற்றிக் காட்ட முடியாது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒருவர் ஸ்விக்கி போன்ற செயலியில் உணவு ஆர்டர் செய்கிறார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உணவு விநியோகிக்கப்படுகிறது. உணவை ஆர்டர் செய்தது யார் என்பதுதானே முக்கியம்? விநியோகித்த நேரத்தை வைத்து ஆர்டர் செய்தவரை மாற்ற முடியுமா? அதுபோலத்தான் இந்தப் புத்தகங்களும். கொள்முதல் ஆணையும் பணம் விடுவிப்பதற்கான செயல்முறை ஆணையும் திமுக ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. மீண்டும் நாமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம்.

ஆனால், மக்களின் தீர்ப்பு வேறு விதமாக இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இந்தச் செயற்கை நுண்ணறிவு ஊழலில் தொடர்புடையவர்கள், திமுகவின் அழுத்தத்துக்குக் காரணமானவர்கள், முந்தைய ஆட்சியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

சர்ச்சைக்குரிய ஒரு பெயரைப் பற்றிக் கேட்டீர்கள். இதோ, வரிசை எண் 3481-ல் அந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. அதற்கான பட்டியலில் சம்பந்தப்பட்டவரின் கையெழுத்தும் இருக்கிறது.

உண்மையான பதிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

தாமரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் யார் என்பதுதான் என் கேள்வி. கமலம்பாள் கருணாநிதி என்ற பெயரில் 100 புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை யாருக்காவது தெரியுமா? தாமரை முரளி, தாமரை ரவி, தாமரை பன்னீர், பவித்ரா கருணாநிதி ஆகியோர் யார்? இலக்கிய உலகில் பெருமாள் முருகன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களைத் தெரியும். ஆனால் இந்தப் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியவர்களை யாருக்கும் தெரியவில்லை. இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

கள்ளநோட்டு அச்சிடுவதுபோல, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மற்ற எழுத்தாளர்களின் 10, 20 புத்தகங்களிலிருந்து உள்ளடக்கங்களை எடுத்து மாற்றியமைத்து, புதிய புத்தகங்களாக உருவாக்குவதை ஒரு தொழிலாகவே செய்திருக்கிறார்கள்.

எங்கள் ஆட்சி அமைந்த பிறகு, பபாசி உள்ளிட்ட பதிப்பக அமைப்புகளுடன் தொடர்புடைய சில பதிப்பாளர்கள் என்னைச் சந்தித்து வேதனையைத் தெரிவித்தனர். ‘முந்தைய ஆட்சியில் எங்களுடைய புத்தகத்தில் ஒரே ஒரு பிரதிதான் நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இத்தனை நூலகங்கள் இருக்கும்போது ஒரு பிரதி மட்டும் வாங்குவது எங்களை அவமானப்படுத்துவதுபோல் இருக்கிறது. அந்த ஒரு பிரதியும் வேண்டாம்’ என்று அவர்கள் கூறினார்கள்.

நூல் கொள்முதல் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். குறைகளைச் சரிசெய்வதாக அவர்களிடம் உறுதியளித்தேன். இப்போது ஏன் உண்மையான எழுத்தாளர்களிடமும் பதிப்பகங்களிடமும் குறைந்த எண்ணிக்கையில் புத்தகங்கள் வாங்கப்பட்டன என்பது புரிகிறது. அதற்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்களைக் குவித்திருக்கிறார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு.

நூலகக் கட்டடங்களின் கட்டுமானத்தையும் விசாரிக்கக் கோரிக்கை

புத்தகக் கொள்முதலில் மட்டும் அல்ல; நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டதிலும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதர்ஜுனாவிடம் உங்கள் மூலமாகக் கோரிக்கை வைக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதிலேயே இத்தனை கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், கட்டுமானப் பணிகளில் என்ன நடந்திருக்கிறது? கட்டடங்களின் உறுதித்தன்மை சரியாக இருக்கிறதா?

பிரம்மாண்டமான நூலக வளாகங்களைக் கட்ட எவ்வளவு செலவிடப்பட்டது? அந்தச் செலவுகளிலும் ஊழல் நடந்துள்ளதா என்பதைப் பொதுப்பணித் துறை விசாரிக்க வேண்டும். இது மாணவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. நான் மாணவனாக இருந்த காலத்திலிருந்தே அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வந்து கொண்டிருக்கிறேன். யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் வாசகர்களும் இங்கு வருகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தையும் பதிப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயல்களை வரலாறு மன்னிக்காது.

இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகனைத் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன். சிந்தைத் தளத்துக்கும் பாராட்டு தெரிவித்தேன். அவர்கள் வெளிப்படுத்தியிருப்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே. முறையாக விசாரித்தால் பெரிய அளவில் தொடர்புடையவர்கள் வெளிவருவார்கள்.

அரசாங்கம் நேர்மையாகச் செயல்பட வேண்டும். ஆனால் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்குப் பதில் அளிக்காமல் விவகாரத்தைத் திசைதிருப்புகிறார்கள். பெருமாள் முருகனை மிரட்ட முயன்றாலும் உண்மையை மறைக்க முடியாது. பதிப்பாளர்கள் பலரை எனக்குத் தெரியும். மாணவனாக இருந்தபோது புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்று பேச்சுப் போட்டிகளில் வென்றிருக்கிறேன். புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று புத்தகங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். மனைவியின் நகைகளை அடகு வைத்துப் புத்தகம் வெளியிடும் பதிப்பாளர்களின் சிரமங்களை நான் அறிவேன்.

நூல் கொள்முதலில் முன்பும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பதிப்பாளர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் வகையில், குறுகிய காலத்தில் அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது இதுவரை இல்லாத வகையிலான முறைகேடு.

அகல் விளக்கு பதிப்பகத்தின் விளக்கத்துக்குப் பதில்

அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் புத்தகங்கள் தொடர்பான உத்தரவு வந்ததாகக் கூறியிருக்கிறார். அதாவது திமுக ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவு வந்திருக்கிறது. புத்தகங்களில் தவறு இருந்தால் மாற்றித் தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது வெறுமனே மாற்றித் தரக்கூடிய தவறா? ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு, புத்தகங்களை மாற்றித் தருவதாகச் சொன்னால் போதுமா? திமுகவினர் இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க முயன்று திசைதிருப்புகிறார்கள். அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஒரு ரூபாய் முறைகேடு நடந்திருந்தாலும் அது தவறுதான். இந்த ஒரு கொள்முதல் ஆணையில் மட்டும் ரூ.17 லட்சம் இடம்பெற்றுள்ளது. மற்ற நூலகங்களுக்கு எத்தனை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன? ஆங்கிலப் புத்தகங்களும் மின்னூல்களும் உள்ளன. ரூ.17 லட்சம்தானே என்று சாதாரணமாகக் கருத முடியாது. முறைகேடாகச் செலுத்தப்பட்ட பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவோம்.

கொள்முதல் செய்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு

கொள்முதல் ஆணையில் உள்ள புத்தகங்களும் அவற்றின் வரிசை எண்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துத்தான் நூலக ஊழியர்கள் முத்திரையிட்டு அலமாரிகளில் அடுக்குவார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களை வாங்க முடிவு செய்தது யார் என்பதுதான் கேள்வி. கொள்முதல் செய்தவர்கள் நூல்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டாமா? புத்தகங்களை அடுக்கும் சாதாரண ஊழியரிடம் மட்டும் பொறுப்பைக் கேட்பது சரியா?

திமுகவினரின் பங்கு மட்டுமல்ல, அதிகாரிகளின் பங்கும் விசாரிக்கப்படும். அதே நேரத்தில், ஆளுங்கட்சியின் உத்தரவுகளுக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்பட்டிருக்கலாம். ஓர் ஊழல் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத்தானே முதல் பொறுப்பு? அதிகாரிகளைக் காட்டிவிட்டு அரசியல் பொறுப்பிலிருந்தவர்களை விட்டுவிட முடியாது. ஆயிரக்கணக்கான புத்தகங்களும் கோடிக்கணக்கான ரூபாயும் தொடர்புடைய இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறேன்.

சிக்மா, பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்கள் குறித்தும் விசாரணை

அருள் புத்தகாலயம், பல்லவி பதிப்பகம், ஓம் பிரகாஷ் உள்ளிட்ட பெயர்களும் இந்தக் கொள்முதல் விவகாரத்தில் இடம்பெறுகின்றன. சில பதிப்பகங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. மதுரை கலைஞர் நூலகத்திலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும்.

சிக்மா பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களும் இருக்கின்றன. இவற்றுக்கிடையே ஒரு கூட்டமைப்பு இருக்கிறதா என்பதை விசாரிப்போம். அதற்கான முதல் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புக் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். விசாரணை முடிந்ததும் பல தகவல்கள் வெளிவரும். இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்களுக்கும் முந்தைய திமுக ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்பதையும் கண்டறிவோம்.

திமுகவினர் ‘விஞ்ஞான ஊழல்’ செய்வதாக நாங்கள் முன்பு குற்றம்சாட்டியிருக்கிறோம். இப்போது எங்கள் ஆட்சிக் காலத்திலேயே அதன் புதிய வடிவத்தைப் பார்க்கிறோம்.

சீதா பிரகாஷ், ரச்சகா ரவிச்சந்திரன், வினோத் விஜய், ஐஸ்வர்யா சிட்டி பாபு போன்ற பெயர்களும் பட்டியலில் உள்ளன. இந்தப் புத்தகங்களின் தலைப்புகளைப் பதிப்பாளர்கள் வழங்கியுள்ளனர். பல்வேறு நிலைகளைக் கடந்த பிறகே நூல் தேர்வுக் குழு அவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 137 பேர் கொண்ட குழுவில் அந்தந்தத் துறைகளின் நிபுணர்கள் இருந்தனர். அதற்கு மேலாக உயர்நிலைக் குழுவிலும் அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் புத்தகங்களை உண்மையாகப் படித்துப் பார்த்திருந்தால், ஒரு பக்கத்தைக் கூடத் தாண்டியிருக்க முடியாது.

நூல் தேர்வுக்கு 54 பிரிவுகள்; விலை பேச்சுவார்த்தைக் குழு

நூல்களைப் பரிந்துரைப்பதற்கான குழு மட்டுமல்ல; புத்தகங்களின் விலையைப் பேச்சுவார்த்தை மூலம் குறைப்பதற்கும் தனிக் குழு இருந்துள்ளது. அந்தக் குழுவின் கூட்டங்களும் நடந்துள்ளன. இவை அனைத்துக்குமான ஆவணங்கள் இருக்கின்றன.

அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நிகண்டுகள் தொடர்பான நூல்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அரசேந்திரன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரிய நூல்களுக்கு ஜி. சுந்தர், ரங்கையா முருகன் உள்ளிட்ட அறிஞர்கள் இருந்துள்ளனர். இலக்கணங்கள் மற்றும் உரைகள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ் நூல்களைத் தேர்வு செய்தல், இலக்கியங்கள், கவிதை, நாடகம், சமதர்மம், சமூகப் பொருளுடைமை, மகளிர் மேம்பாடு எனப் பல பிரிவுகள் இருந்துள்ளன. அகர முதலவன், பேராசிரியர் வெற்றிச்செல்வன், அழகிய பெரியவன், வினோத்குமார் உள்ளிட்ட பெயர்களும் பட்டியலில் இடம்பெறுகின்றன.

புதிய நூலகங்களுக்கான நூல்களைத் தேர்வு செய்ய மொத்தம் 54 பிரிவுகளாகப் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இவ்வளவு விரிவான தேர்வு நடைமுறை இருந்தும் இத்தகைய நூல்கள் எவ்வாறு ஒப்புதல் பெற்றன என்பதுதான் கேள்வி.

தவெகவுக்கு எதிரான அரசியல் சதி எனக் குற்றச்சாட்டு

(‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளர் பெயர் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்து) தாங்கள் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று திமுகவினர் நினைத்திருக்கிறார்கள். ஒரு கட்சியையும் அதன் தலைமையையும் திட்டமிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள். ஒருவரைச் சிறுமைப்படுத்துவதற்காக இவ்வளவு மோசமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘கதை, திரைக்கதை, வசனம்: அறிவாலயம்’ என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது முழுமையாகச் சிக்கிக்கொண்டார்கள்.

இந்தப் புத்தகங்களின் பெயர்கள் தற்செயலாக வந்துவிட்டன என்று சொல்லித் தப்பிக்க முடியாது. கமலம்பாள் கருணாநிதி என்ற பெயர் எப்படி வந்தது? கொள்முதல் ஆணை எப்படி வழங்கப்பட்டது? கருவூலத்திலிருந்து பணம் எவ்வாறு விடுவிக்கப்பட்டது? இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

விசாரணை நடைபெறும்போது உண்மைகள் வெளிவரும். சர்ச்சைக்குரிய புத்தகங்களும், அவற்றுக்கான பட்டியலும், கையெழுத்துகளும் எங்களிடம் உள்ளன. நூல் தேர்வுக் குழுவினரை மட்டும் குற்றம்சாட்டிவிட்டு அரசியல் பொறுப்பிலிருந்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்களுடைய செல்வாக்கு இல்லாமல் இப்படிப்பட்ட கொள்முதல் நடந்திருக்க முடியாது என்பதே எனது குற்றச்சாட்டு. மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடியவர்களை மக்களும் மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள்.

பொது நூலகக் கொள்முதல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு

திமுக இப்போது இதுவரை சந்திக்காத வகையிலான எதிர்ப்பைச் சந்திக்கிறது. முன்பு பல ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் இந்த விவகாரத்தில் தப்பிக்க முடியாது. பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக ஏற்கெனவே உயர் நீதிமன்றமும் எச்சரித்திருக்கிறது.

இதுதொடர்பாக 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2024-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. நூலகக் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு இப்போது செயற்கை நுண்ணறிவு என்ற புதிய தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்போம். இந்த விவகாரம் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து வெளியிடுவோம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட 2011-ஆம் ஆண்டில் ரூ.30 கோடிக்குப் புத்தகங்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.30 கோடி மட்டுமல்ல; பல நூறு கோடி, பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது விசாரணையில் தெரியவரும். போலிப் பதிப்பாளர்களுக்குச் சென்ற ஒவ்வொரு ரூபாயையும் திரும்பப் பெறுவோம். தரமற்ற புத்தகங்களை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவோம். இந்த ‘டிஜிட்டல் கரையான்கள்’ புகுந்த நூலகங்களை முதலமைச்சர் தலைமையில் மீட்டெடுப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்குப் பதில்

தவறு செய்யவில்லை என்பதில் முழுமையான உறுதி இருக்க வேண்டும் என்றும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும். அதற்கு முன்பாக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சாதாரணமாக ஒரு துண்டுப் பிரசுரமோ சுவரொட்டியோ அச்சிடப்பட்டாலும், ஒரு புத்தகம் வெளியிடப்பட்டாலும் காவல்துறையினர் அதன் பிரதியைப் பெற்றுச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படியிருக்கும்போது, இத்தனை புத்தகங்கள் வெளியானது உளவுத்துறைக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. நூல்களின் உள்ளடக்கத்தைப் படித்திருந்தால் முறைகேடு முன்பே வெளிவந்திருக்கக்கூடும்.

ஆனால், 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் உளவுத்துறை படிக்க வேண்டும் என்பதல்ல எனது முதன்மையான கருத்து. நூல் தேர்வுக் குழுவினரை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட அனுமதித்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதி, வெளியீட்டு விழா நடத்தி, அதன் உள்ளடக்கத்தை வெளிப்படையாக அறிமுகப்படுத்தினால் அதைப் படித்து மதிப்பிட முடியும். ‘ஊடகத்தில் நேர்மை’ என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியானாலும் அதைப் படித்துப் பார்த்து முடிவு செய்யலாம். ஆனால் இங்கு யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தப்பித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். இனி தப்பிக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel