உடற்பயிற்சி செய்யணும்னு முடிவு எடுத்ததும் பலரும் முதல்ல வாங்குவது ஒரு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூ. ஆனால் கடைக்குப் போனால் வாக்கிங் ஷூ, ரன்னிங் ஷூ என்று வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். பார்க்க இரண்டும் ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன. நம் உடற்பயிற்சிக்குப் பொருந்தாத ஷூவைத் தேர்ந்தெடுத்தால் பாதங்களில் வலியும் அசௌகரியமும் வரலாம்.
ஓடுவதற்கு ரன்னிங் ஷூ ஏன் வேண்டும்?
ஓடும்போது ஒவ்வொரு அடியிலும் பாதம் தரையில் வேகமாக மோதும். அதனால் குதிகால், கணுக்கால், முழங்கால் பகுதிகளில் அழுத்தம் விழும். அதைக் குறைக்க ரன்னிங் ஷூக்களில் தனிப்பட்ட குஷனிங், அதிர்வைத் தாங்கும் வசதிகள் வைக்கப்படுகின்றன.
வேகமாக ஓடும்போது பாதங்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்கும் வகையிலும் இவை வடிவமைக்கப்படுகின்றன. தினமும் ஜாகிங், ஓட்டப்பயிற்சி, மாரத்தான் பயிற்சி செய்பவர்களுக்கு இவைதான் பொருந்தும்.
நடைப்பயிற்சிக்கு வாக்கிங் ஷூ ஏன் நல்லது?
நடக்கும்போது பாதம் தரையைத் தொடும் முறை, ஓடும்போது இருப்பதிலிருந்து வேறுபடும். முதலில் குதிகால் தரையில் பதியும், பிறகு பாதத்தின் முன்பகுதி தொடும். இந்த இயல்பான அசைவுக்கு ஏற்றபடி வாக்கிங் ஷூக்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இவை பொதுவாக எடை குறைவாகவும், பாதம் எளிதாக வளைந்துகொடுக்கும்படியும் இருக்கும். தினமும் நீண்ட தூரம் நடப்பவர்கள், அலுவலகத்துக்குப் போகிறவர்கள், நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு இவை வசதியாக இருக்கும்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- ரன்னிங் ஷூ: அதிர்வைத் தாங்கும் குஷனிங்குக்கு அதிக முக்கியத்துவம்.
- வாக்கிங் ஷூ: இயல்பான பாத அசைவு, நெகிழ்வுத்தன்மை, நீண்ட நேரப் பயன்பாட்டுக்கான வசதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்.
இரண்டையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதை விட, உங்கள் உடற்பயிற்சிக்கு எது பொருந்துமோ அதையே தேர்ந்தெடுங்கள். ஷூவின் அளவு, பாதத்தைப் பிடிக்கும் பிடிமானம், வசதி ஆகியவற்றையும் பாருங்கள்.
ரூ.500 முதல் ரூ.5,000 வரை… என்ன பார்த்து வாங்கலாம்?
இப்போது சந்தையில் ரூ.500-லிருந்து ரூ.5,000, அதற்கும் மேலேயும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் கிடைக்கின்றன. விலை அதிகம் என்பதற்காகவே ஒரு ஷூ சிறந்தது என்று முடிவுசெய்ய முடியாது.
வாங்கும் முன் காலில் போட்டு நடந்தோ ஓடியோ பார்த்து, சரியாகப் பொருந்துகிறதா, உறுத்துகிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள். சாயங்காலம் கால் லேசாக வீங்கியிருக்கும் நேரத்தில் வாங்கினால் அளவு சரியாக அமையும் என்று சொல்வார்கள். ஷூவின் தரம், தயாரிப்பு நிறுவனம், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அதன் ஆயுளும் மாறும்.
அதனால் அடுத்த முறை ஷூ வாங்கப் போகும்போது, தோற்றத்தையும் விலையையும் மட்டும் பார்க்காமல், உங்கள் தேவைக்கு ஏற்றதா என்பதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.










