தீபாவளி ஸ்பெஷல் : கடை மிக்சர் மாதிரியே மொறுமொறுன்னு வீட்டிலேயே செய்யலாம்!

By Minnambalam Desk

|

Published on 7 Nov 2026, 2:26 PM

தீபாவளி என்றால் புது டிரஸ், பட்டாசு மட்டுமில்லை. வீட்டில் தயாராகும் இனிப்பும் காரமும் தான் உண்மையான பண்டிகை மணம். முறுக்கு, அதிரசம், லட்டு என்று எத்தனை பலகாரம் இருந்தாலும், குழந்தைகள் முதல் தாத்தா வரை எல்லோரும் முதலில் கைவைப்பது மிக்சரில்தான்.

கடையில் கிடைப்பது போலவே மொறுமொறுப்பான மிக்சரை வீட்டிலும் செய்யலாம். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் வர, சில சின்ன விஷயங்களைக் கவனித்தால் போதும்.

ADVERTISEMENT

என்னென்ன வேண்டும்?

  • கடலை மாவு – 2 கப்
  • அரிசி மாவு – 1 கப்
  • வேர்க்கடலை – அரை கப்
  • பொட்டுக்கடலை – அரை கப்
  • பூண்டுப் பற்கள் – 10
  • கறிவேப்பிலை – 3 கொத்து
  • மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு
  • பொரிக்க எண்ணெய்

செய்யும் முறை

ADVERTISEMENT

முதலில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள்.

சூடான எண்ணெயில் ஓமப்பொடி அச்சில் மாவைப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். காராபூந்திக்குத் தனியாக மாவைக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றிப் பொரியுங்கள்.

ADVERTISEMENT

அடுத்து வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் தனித்தனியாகப் பொரித்தெடுங்கள். கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்தால் தீபாவளி மிக்சர் தயார்.

எண்ணெய் குடிக்காமல் இருக்க 4 டிப்ஸ்

1. மாவில் சூடான எண்ணெய்: மாவு பிசையும்போது இரண்டு ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

2. எண்ணெயின் சூடு: பொரிக்கும்போது எண்ணெயின் சூட்டைச் சரியாக வைத்திருங்கள். ரொம்பச் சூடாகவும் கூடாது, ரொம்பக் குறைவாகவும் கூடாது. ஒரு சிட்டிகை மாவைப் போட்டுப் பார்த்து, அது மேலே வந்தால் எண்ணெய் தயார்.

3. எண்ணெய் உறிஞ்சும் காகிதம்: பொரித்தவற்றை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் பரப்பி வையுங்கள்.

4. ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: பூண்டு, கறிவேப்பிலையில் ஈரப்பதம் இருந்தால் எண்ணெயில் போட்டதும் தெறிக்கும், மொறுமொறுப்பும் போய்விடும். அதனால் நன்றாகக் காயவைத்த பிறகே பொரியுங்கள்.

எப்படிச் சேமிப்பது?

மிக்சர் முழுக்க நன்றாக ஆறிய பிறகுதான் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடவேண்டும். அப்போதுதான் மொறுமொறுப்பு நாள் கணக்கில் நீடிக்கும்.

இந்த தீபாவளிக்கு வழக்கமான பலகாரங்களோடு, வீட்டிலேயே செய்த மிக்சரையும் வைத்து விருந்தாளிகளை அசத்துங்கள். இது எண்ணெயில் பொரிக்கும் உணவுதான் என்றாலும், சரியான பக்குவத்தில் செய்தால் தேவையில்லாத பிசுபிசுப்பைக் குறைத்துவிடலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel