கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
போலியான எழுத்தாளர்கள் பெயரில் புத்தகங்கள், தவறான வரலாற்றுத் தகவல்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளடக்கங்கள், சந்தை விலையைவிடப் பல மடங்கு அதிகமான விலை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தற்போது, ஆளும் கட்சியினர் முந்தைய திமுகவினர் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அதே சமயம் திமுகவினர், பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது . குறிப்பாக அன்றைய தினம் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் என்று கூறுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக மின்னம்பலம் சார்பில், பெரியார் அறிவுலகத்தின் புதிய புத்தகங்களுக்கான தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த, சென்னை பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் ராமு மணிவண்ணனிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், ”நான் இந்த குழுவில் அரசியல், பொது நிர்வாகம், பன்னாட்டு அரசியல் சார்ந்த சப்ஜெக்ட் பேஸ்டு டொமைன் எக்ஸ்பர்ட் ஆக (Subject-based domain expert) இருந்தேன்,
எங்களைப் பொறுத்தவரையில், அரசியல், பொது நிர்வாகம் மற்றும் பன்னாட்டு அரசியல் ஆகிய துறைகள் சார்ந்து, புத்தகங்களை மட்டுமே பரிந்துரை செய்வோம். அந்தப் புத்தகங்களை வாங்குவதா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் நிர்வாகக் குழுவிற்கே உரியது.
எனவே, குறிப்பிட்ட புத்தகங்களில் உள்ள குளறுபடிகள் அல்லது பிற பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்கோ, அவற்றை பார்வையிட்டு விரிவாகப் பரிசீலனை செய்வதற்கோ எங்களுக்கு வாய்ப்போ பொறுப்போ இல்லை. இத்தகைய விவகாரங்கள் நிர்வாகம் சார்ந்தவை என்பதால், அதற்குரிய பொறுப்பில் உள்ள நிர்வாகக் குழுவினரே அவற்றை பார்க்க வேண்டும். எங்களுடைய பணி துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவது மட்டுமே” என்று கூறினார்.
மேலும் அவர், ”என்னை பொறுத்தவரை இது புதிதாக நடப்பது ஒன்றல்ல. பல நூலகங்களில் பல வருடங்களாக நடக்கிறது. அதாவது ஒரு நூலகத்தினுடைய கட்டமைப்பில், புத்தகம் வாங்குவது, பரிசீலனை செய்வது என இதில் நிறைய குறைபாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல பத்து ஆண்டுகளாக நடக்கிறது. சமீபத்தில் நடந்தது என்பது மட்டும் கிடையாது.
அதோடு மட்டுமல்லாமல், இதற்கு நிர்வாகத்தில் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதனுடைய செயலாளரோ, நூலகத்தினுடைய தலைமையோ என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஒரு பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது சரியானதாக இருக்கும்.
இதில் விசாரணை செய்வதில் அரசுக்கு என்ன தடை இருக்க போகிறது.
லஞ்ச ஒழிப்பு துறையில் அமைச்சர் புகார் அளித்திருக்கிறார். ஆனால் நேரடியாகவே துறை சார்ந்து விசாரணை செய்யலாமே. அந்த ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு அடுத்த நிலைக்கு செல்லலாமே.
துறை சார்ந்த விசாரணை தான் முதல் படியாக இருக்க வேண்டும். ஒரு அறிவுசார் தளத்தில் தவறான வழிகாட்டுதல்கள் நடந்திருக்கிறது.
50 கோடி ரூபாயில் ஊழல் நடக்கிறது என்றால் அது சாதாரணமான 50 கோடி விஷயம் மட்டுமே என்று சொல்லலாம்.
அறிவுசார் தளத்தில் நடக்கும் ஊழல் என்பது மக்களுடைய விழிப்புணர்வு, படிக்கிற வாய்ப்பு என எல்லாவற்றையும் பாதிக்கிறது. எனவே அரசாங்கமே நேரடியாக மிகப்பெரிய ஒரு விசாரணையை தொடங்க வேண்டும்.
இந்த சூழலில் ஆன்டி கரப்ஷனில் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்பது அரசாங்கத்தின் உடைய நிலைப்பாட்டில் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
அதுமட்டுமல்ல இப்போது இந்த மொத்த விவாதமே ஒரு அரசியல் மயமாக்கப்பட்டதாக நாம் பார்க்க வேண்டும். காரணம், கடந்த ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட சில புத்தகங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போது இந்த அரசாங்கம் மற்றவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. தேர்வு குழுவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இந்த குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு தான் சொல்ல வேண்டும்.
அதேபோன்று யார் பார்வைக்கும் இந்த புத்தகங்கள் கொண்டுவரப்படாமல் நூலகத்துக்குள் எப்படி போனது என்பது குறித்து அந்த நூலகத்தின் நிர்வாகம்தான் பேச வேண்டும்.
எங்களுடைய வேலை பரிந்துரைகளோடு முடிந்து விட்டது.
ஜூன் மாதம் வாங்கிய புத்தகத்தை ஏன் நவம்பர் 5,6 தேதிகளில் பேசுகிறார்கள். இடையில் நான்கு மாத இடைவெளி இருக்கிறது அல்லவா.
எதிர்க்கட்சியான திமுக தலைவர் கோவைக்கு சென்று பெரியார் அறிவுலகத்தை பார்வையிடுகிறார். அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இது நடந்து இரண்டே நாட்களில் இந்த நூலகத்தில் இப்படி ஊழல் எல்லாம் நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
எனவே ஒரு குறிப்பிட்ட அரசியல் ரீதியாக இந்த மொத்த விவாதம் உருவாகும் போது இதனுடைய நேர்மை தன்மை வெளிப்படை தன்மை மீது சந்தேகம் வருகிறது. இதில் எந்த பிழையும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் விசாரணை செய்ய வேண்டும் அல்லவா.
முன்னாள் முதலமைச்சர் சென்று வந்த பிறகு தான், இதுபோன்று ஊழல் புகார்கள், எழுத்தாளர்கள் தொடர்பான புகார்கள் எல்லாம் வருகிறது. எனவே முன்னாள் முதலமைச்சர் அங்கு சென்று திரும்பிய பிறகுதான் இந்த உண்மைகளை பேசக்கூடிய தருணம் உருவாகிறதா?
இந்த விவகாரம் எந்த அளவுக்கு அரசியல் ஆக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். அதேபோல நூலகத்திற்குரிய மரியாதை புத்தகங்களுக்குரிய தகுதி இதையெல்லாம் விசாரணை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் யாருமே மறுப்பு சொல்லவில்லை.
திமுகவாக இருந்தாலும் மற்ற கட்சியாக இருந்தாலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
அரசு தரப்பிடம் ஆதாரம் இருந்தால் துறை சார்ந்த விசாரணைக்கு பிறகு அதை ஆண்டி கரப்ஷனிடம் கொடுத்தால் அவர்கள் கைது செய்வார்கள்.
எங்களைப் பொறுத்தவரை ஒரு எக்ஸ்பர்ட் டொமைனிலிருந்து நாங்கள் பரிந்துரை செய்த பிறகு அதற்கு நிர்வாகமும் அரசும்தான் பொறுப்பு.
முந்தைய அரசியல் தான் இதெல்லாம் நடந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கான சாட்சியத்தை கொடுத்து விசாரணை கமிஷனை அமையுங்கள்.
நூல்களின் பதிப்பு தேதிகளில் எல்லாமே ஜூன் மாதம் வருகையில் பதிவாகி இருக்கிறது.
இந்த புத்தகங்களை வருகை பதிவேட்டில் ஏற்றும் போது கூட இது பற்றி பார்த்திருக்கலாம். எனவே இந்த புத்தகங்கள் எல்லாம் இடையில் எங்கேயோ வாங்கி அதில் திணிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒரு ஆராய்ச்சி நிறுவன பேராசிரியரை தவறாக பதிவு போட்டார் என கூறி காலையில் 5 மணிக்கு கைது செய்து அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஆனால் இங்கு இவ்வளவு குளறுபடிகள் நடந்து இருக்கிறது என்று சொல்லும் போது, சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளரையோ நிறுவனத்தையோ அழைத்துச் சென்று விசாரணை செய்யலாம் அல்லவா.
இந்த விவகாரத்தில் விசாரணை செய்வதற்கு எவ்வளவோ வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் இந்த அரசு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.










