மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. 2025 நவம்பர் 3-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இந்தக் குழு, ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், படிகள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறது. ஆனால் சம்பளம் எவ்வளவு கூடும், ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்ன என்பது பற்றிய இறுதி அறிவிப்பு இன்னும் வரவில்லை.
1. புதிய சம்பளம் எப்போது கையில் வரும்?
பரிந்துரைகளைத் தாக்கல் செய்ய, குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன்படி, 2027 மே மாதத்துக்குள் அறிக்கை ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியக் குழு வரும் வழக்கத்தை வைத்துப் பார்த்தால், புதிய சம்பளப் பலன்கள் 2026 ஜனவரி 1 முதல் பொருந்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இறுதி முடிவை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்.
2. ஃபிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு?
ஊழியரின் இப்போதைய அடிப்படைச் சம்பளத்தைப் புதிய சம்பளமாக மாற்றும் எண்தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர். சம்பள உயர்வு எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதில் இதுதான் முக்கியம்.
7-வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக இருந்தது. அதனால் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது.
இப்போது 8-வது ஊதியக் குழுவுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் முடிவாகவில்லை. ஊழியர் சங்கங்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளன. ஆனால் அவை இறுதிப் பரிந்துரைகள் இல்லை.
3. ஓய்வூதியதாரர்களுக்குப் பலன் உண்டா?
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். அடிப்படை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றிலும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய ஓய்வூதியத் தொகை எவ்வளவு, எப்படிக் கணக்கிடப்படும் என்பதில் இதுவரை இறுதி அறிவிப்பு இல்லை.
4. அடுத்து என்ன நடக்கும்?
ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள், பல துறைகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் ஊதியக் குழு கருத்துகளைக் கேட்டு வருகிறது. மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துள்ளன.
அறிக்கை ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் புதிய சம்பளம், ஓய்வூதியம், ஃபிட்மென்ட் ஃபேக்டர், நிலுவைத் தொகை பற்றிய தெளிவான அறிவிப்புகள் வரும். அதுவரை ஊழியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.










