தீபாவளிக்குத் திகட்டத் திகட்ட ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டாகிவிட்டது. முதல் வேலையாக எண்ணெய்க்கு தற்காலிக டாட்டா சொல்லிவிட்டு, எண்ணெயே சேர்க்காமல் சமைக்கக்கூடிய சூப்பர் டேஸ்ட்டி உணவை இந்த மழைக்காலத்தில் ருசிப்போம்.
**எப்படிச் செய்வது?**
அரை கப் பாசிப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்கவைத்து அதில் பருப்பைச் சேர்த்து அரை வேக்காடாக வேகவைக்கவும். பிறகு, நீரை வடிகட்டி, பாசிப்பருப்பை எடுத்து ஆறவிடவும். ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். வேக வைத்த பாசிப்பருப்பு, உருளைக்கிழங்குடன் அரை கப் துருவிய கேரட், அரை கப் மாதுளை முத்துகள், அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம், கால் கப் நறுக்கிய மாங்காய், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, நறுக்கிய இரண்டு டேபிள்ஸ்பூன் புதினா, நான்கு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய ஒரு வெள்ளரிக்காய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
**சிறப்பு**
நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த இந்த பேல், அனைவருக்கும் ஏற்றது. இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.









