2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததால் அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு, கடந்த மாதம் விசிகவிலிருந்து விலகிய நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது என்னுடைய தாய் வீடு தான். என்னுடைய குடும்பமே பாரம்பரியமாக திமுக சார்ந்த குடும்பம்தான். தற்போது மீண்டும் எனது தாய் வீட்டிற்கே வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி கழகத் தலைவர் இடும் கட்டளைகளை ஏற்று, களப்பணி செய்யக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
விசிக-வில் தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியால்தான் வெளியே வந்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் சீட்டுக்காக விசிகவிலிருந்து வெளியே வரவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுகள் வரும் வரை விசிக-வின் தேர்தல் அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன, அவர்கள் என்னென்ன நிலைப்பாடுகளை எடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விசிக தலைமை எடுத்த அந்த அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு எந்த உடன்பாடும் விருப்பமும் இல்லை” என்றார்.
மேலும், “கடந்த மூன்று மாத காலமாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு தெளிவற்ற தடுமாற்றம் நீடித்து வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
விஜய் மீதான விமர்சனம் குறித்த கேள்விக்கு, “விஜய் அவர்களை ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்று நான் சொல்லவில்லை, திருமாவளவன் தான் சொன்னார். அதேபோல், ‘விசிலடிக்கும் கூட்டமெல்லாம் தியேட்டருக்குப் போகலாம், சட்டமன்றத்திற்கு வரக்கூடாது’ என்று கூறியதும் அவர்தான். ஆனால், அப்படி விமர்சித்துவிட்டு, தேர்தலுக்கு பின்னர் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, மீண்டும் விஜய் அவர்களின் தவெக கட்சியோடு கூட்டணி வைத்தால் எப்படி? இதில் கொள்கை முரண்பாடு வரவில்லையா?
‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கைதான் என்றாலும், விஜய் அவர்களை ஆர்.எஸ்.எஸ். பிள்ளை என்று சொன்ன பிறகு அவர்களுடன் கூட்டணி வைக்க முற்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.
எழுச்சித் தமிழரின் கொள்கை உறுதித்தன்மை குறித்த கேள்விக்கு, “கடந்த 3 மாத காலமாக அவரிடம் தடுமாற்றம் உள்ளது என்பது உண்மைதான். நான் அவருடன் அது குறித்துப் பேசவில்லை. விசிக இன்னும் திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாகக் கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி இருந்தால் நான் இன்று திமுகவில் இணைந்திருக்க முடியாது” என்று விசிக-வின் தற்போதைய இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்தார்.
