பகுஜன் சமாஜ் தலைவர் ஆகிறாரா பா.ரஞ்சித்?

Published On:

| By Aara

கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்ததோடு, இறுதி நிகழ்வு முழுவதிலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி இரவு பா.ரஞ்சித் தனது சமூக தளப் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் திமுக அரசை நோக்கி வெளிப்படையாக அழுத்தமான சில கேள்விகளை எழுப்பினார்.

“பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.

திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?” என்று கேட்டிருந்தார்.

பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு சமூக தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகள் எழுப்பாத அளவுக்கு கடுமையாக பா.ரஞ்சித் கேள்விகளை எழுப்பியிருக்கிறாரே… ஏன் அவர் ஒரு வேளை பகுஜன் சமாஜ் கட்சியில் இணையப் போகிறாரா என்ற கேள்விகளும் சமூக தளங்களில் எழுப்பப்படுகின்றன.

இதுகுறித்து பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் இருவரையும்  அறிந்த வடசென்னை பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

“ஆம்ஸ்ட்ராங் இழப்பை பா.ரஞ்சித்தால் உள்ளபடியே தாங்க முடியவில்லை. நெடுநாட்களாக அவர் ஆம்ஸ்ட்ராங்கை அறிவார். பா.ரஞ்சித்தின் சொந்த அண்ணனான வழக்கறிஞர் பிரபு பகுஜன் சமாஜ் கட்சியில் பொறுப்பில் உள்ளார். அவர்தான் ரஞ்சித்தை ஆம்ஸ்ட்ராங்கிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘மெட்ராஸ்’ படப் பிடிப்பு சமயங்களில் ரஞ்சித்துக்கு ஆம்ஸ்ட்ராங் பெரும் உதவியாக இருந்தார். இதன் காரணமாகவும் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பாதை காரணமாகவும் அவர் மீது ரஞ்சித்துக்கு பெரும் மரியாதை உண்டு. ரஞ்சித்தின் நீலம் ஃபவுண்டேஷன் நிகழ்ச்சிகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டதுண்டு.

இந்த பின்னணியில்தான் அவரால் ஆம்ஸ்ட்ராங் இழப்பை தாங்க முடியவில்லை. அதனால்தான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் வரை அமைதி காத்துவிட்டு திமுக அரசுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு ரஞ்சித்தின் நண்பர்கள் சிலர் அவரை அரசியலில் நேரடியாக ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

மேலும் சிலரோ ரஞ்சித்துக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.   ‘சினிமாவில் இருந்து கொண்டு கருத்து அரசியல் செய்வது வேறு. களத்தில் இறங்கி கட்சி அரசியல் செய்வது வேறு.

எனவே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். பகுஜன் சமாஜ் கட்சி என்பது ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் காரணமாகத்தான் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சிக்கு தமிழகத் தலைமையை ஏற்குமாறு சிலர் தூண்டிவிடலாம்.  ஆனால் ஆம்ஸ்ட்ராங் வகித்த பொசிஷன் வேறு. உடனடியாக உணர்ச்சி மிகுதியில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். யோசித்து செய்யுங்கள்’ என்று பா.ரஞ்சித்துக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்” என்கிறார்கள் ரஞ்சித் வட்டாரத்தில் நடப்பதை அறிந்தவர்கள்.

அதேநேரம், ரஞ்சித் நேரடி கட்சி அரசியலில் ஈடுபடுவது பற்றி தீவிரமான ஆலோசனையில் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

நெல்லையின் புதிய மேயர் யார்? மீண்டும் வஹாப் கையில் பந்து

‘செல்வப்பெருந்தகை என்ன மகாத்மாவா’… ‘அரைகுறை அண்ணாமலை’… முற்றும் வார்த்தைப் போர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share