நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, தங்களுடைய ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாநகராட்சி கமிஷனர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலை 8 ஆம் தேதி 2 மாநகராட்சி மன்றங்களும் கூடின. மேயர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருக்கிறார். மாநகராட்சியின் மேயர் பதவி காலியாக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு மாநகராட்சி கமிஷனர் முறைப்படி தகவல் அனுப்பியுள்ளார் என்கிற செய்தி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இரண்டு மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சியின் மேயர் யார் என்பதில் பலத்தபோட்டி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்னம்பலத்தில் இறுதிப்பட்டியல் தயார் இனிவரும் கோவை மேயர் யார்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதேபோல நெல்லையிலும் மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இது குறித்து நெல்லை அரசியல் வட்டாரத்தில் பேசினோம்.
”நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் 2022ல் நடந்த மாநகராட்சி தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கே அதிக வாய்ப்பு தந்தார். மேயர் உள்ளிட்ட மாநகராட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கான காரணம்.
மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் திமுக 44 கவுன்சிலர்களை வைத்திருக்கிறது. காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு கவுன்சிலர்களை பெற்றுள்ளன. ஆக திமுக கூட்டணி 51 கவுன்சிலர்களை வைத்திருக்கிறது. அதிமுக வெறும் 4 கவுன்சிலர்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் ஆதரவில் மேயர் ஆனார் சரவணன். பெயருக்குத்தான் மேயர் சரவணன். ஆனால் முழு அதிகாரமும் வஹாப்பிடம் தான் இருந்தது. அதனால் வஹாப் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார் என்ற முணுமுணுப்புகளும் எழுந்தன.
ஒருமுறை மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டார் வஹாப். அப்போது மேயர் சரவணனை கடுமையான வார்த்தைகளில் வஹாப் வறுத்தெடுக்க, ‘எனக்கு என்ன சும்மாவா தூக்கிக் கொடுத்தீங்க? 5 கோடி ரூபாய் கொடுத்துதானே வந்திருக்கேன்?’ என்று சாதுவான சரவணன் சேதுவாக மிரட்ட அன்றிலிருந்து வஹாப்புக்கும் சரவணனுக்குமான உறவு அறுந்தது. மேயர் இல்லாமலேயே மாநகராட்சி நிகழ்ச்சிகள் நடந்தன,
மாநகராட்சி முழுக்க முழுக்க வஹாப்பின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
இது உட்பட வஹாப் மீதான புகார்கள் தொடர்ந்து அதிகரித்ததால் கடந்த 2023 மே 21 ஆம் தேதி திருநெல்வேலி மத்திய மாசெ பதவியில் இருந்து வஹாப் நீக்கப்பட்டார்.
அதன் பின் மேயர் சரவணன் நடவடிக்கைகளும் மாறத் தொடங்கின. வஹாபை அவர் மதிப்பதே இல்லை. இதனால்தான் தனக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் 38 கவுன்சிலர்களை மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரச் செய்தார் வஹாப். கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த போர் ஜூலை 3 ஆம் தேதி ஒருவழியாக மேயர் சரவணன் ராஜினாமா செய்ததால் முடிவுக்கு வந்தது.’
இப்போது அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வஹாப்பிடம் மாசெ பதவி இல்லாவிட்டாலும், முழுதாக 38 முதல் 40 கவுன்சிலர்கள் அவரிடம் தான் இருக்கிறார்கள். எனவே வஹாப் கைகாட்டுபவர்தான் அடுத்த மேயராக முடியும். எனவே வஹாப் கையில்தான் இப்போதும் பந்து உள்ளது. மத்திய மாவட்ட பொறுப்பாளரான டி.பி.எம். மைதீன் கான், ‘என்னிடம் எதுவும் கேட்காதீங்க. தலைமையே முடிவெடுக்கட்டும்’ என்று அறிவாலயத்துக்கு சொல்லிவிட்டார்.
இப்போது துணை மேயரான கே ராஜு பொறுப்பு மேயராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனாலும் விரைவில் புதிய மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் ராஜூ துணை மேயர் பொறுப்பேற்றதும் அப்துல் வஹாப்பை தேடிச் சென்று வாழ்த்து பெற்றார். ஜூலை 3 ஆம் தேதி மேயர் சரவணன் ராஜினாமா செய்தார். ஜூலை 4 துணை மேயர் ராஜுவின் பிறந்தநாள். பொறுப்பு மேயரானதை ஒட்டியும், பிறந்தநாளை ஒட்டியும் மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆர். மற்றும் தனது சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களான பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராஜூ.
அப்போது, ‘மீதமிருக்கும் பதவிக் காலம் முழுதும் மேயர் பதவிக்கு என்னையே தலைமைக்கு சிபாரிசு பண்ணுங்க’ என்று அவர்களிடம் ராஜூ வேண்டுகோள் விடுத்திருப்பதாக நெல்லையில் திமுகவினர் பேசிக் கொள்கிறார்கள்.
தற்போது பொறுப்பு மேயராக இருக்கும் துணை மேயர் கே ராஜு எப்படியாவது மீதம் இருக்கும் இரண்டரை வருட பதவி காலத்தை மேயர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறார்
இதேநேரம் இன்னொரு தகவலும் நெல்லை மாநகர திமுக முழுதும் முக்கிய விவாதமாகியிருக்கிறது.
அதாவது ராஜினாமா செய்த சரவணன் (இல்லத்து) பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் புதிய மேயர் அதே பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று தலைமை வரை சில பிள்ளைமார் புள்ளிகள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
திமுகவில் முக்குலத்து சமுதாயத்தினர் 8 பேர், பட்டியல் சமுதாயத்தினர் 8 பேர், நாடார் சமுதாயத்தினர் 4 பேர், முஸ்லிம் 10 பேர் என கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை மேயர் ஆக்கினால் தேவையற்ற குழப்பங்கள் வரும். எனவே ஏற்கனவே மேயர் பதவியில் இருந்த பிள்ளைமார் சமுதாயத்திடமே கொடுக்கலாம் என்பதைதான் உளவுத்துறையும் ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்கிறது.
இதனால் புதிய மேயராக பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவரையே தேர்வு செய்ய வேண்டும் என தலைமை சொல்லிவிட்டதாகவும் திமுகவுக்குள் பேச்சிருக்கிறது.

அப்படிப் பார்த்தால் கார் காத்தார் என்கிற வகையைச் சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன், உலகநாதன், கேண்டீன் மணி என்கிற சுப்பிரமணி ஆகியோர்தான் தற்போது ரேஸில் இருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் பிள்ளைமார் கவுன்சிலர்கள்.
இவர்களில் ஒவ்வொருவரின் பிளஸ் மைனஸ் பற்றியும் மேலே ரிப்போர்ட் சென்றிருக்கிறது.

இவர்களில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். ஆனாலும் அரசியல் அனுபவம் உள்ளவர். பொது மக்களிடம் நெருக்கமான தொடர்புகொண்டவர். இரண்டாவது முறையாக கவுன்சிலராக இருக்கிறார். உலகநாதன் பத்தாவது வரை படித்திருக்கிறார். சுப்பிரமணியும் பள்ளி வரையே படித்திருக்கிறார். மேயர் பதவிக்கு படிப்பு முக்கியம் இல்லை, அரசியல் அனுபவமே முக்கியம் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
மேலும் சிலரோ, ’சமுதாயத்தின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்யலாமா? அடுத்து வரும் பாதி பதவிக் காலம் சர்ச்சைகள், சச்சரவுகள் இல்லாமல் செல்வதற்கு தலைமை அறிவார்ந்த முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.
இதுதான் இப்போதைய நெல்லை மாநகர திமுக நிலவரம்!
–வேந்தன்
அஸ்ரா கார்க்…அமல்ராஜ்… : 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
‘செல்வப்பெருந்தகை என்ன மகாத்மாவா’… ‘அரைகுறை அண்ணாமலை’… முற்றும் வார்த்தைப் போர்!