தங்கலான் : விமர்சனம்!

Published On:

| By christopher

இயக்குநர் பா.ரஞ்சித் என்றதும் சமூக நீதி அரசியல், ஒடுக்கப்பட்டோரின் குரல், தலித் அரசியல் என அவர் பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மனதில் தோன்றும். ஒரு தேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட இயக்குநர் பா. இரஞ்சித்.

இவர் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும்போது “பா. இரஞ்சித் ஒரு தெளிவான அரசியல்வாதி . அதனால் தான் அவரது படங்களில் சிறிதளவும் அரசியல் தவறுகள் தெரிவதில்லை” எனக் கூறியுள்ளார்.

ஆனால், இந்த சித்தாந்தங்கள் எல்லாம் கடந்து பா.இரஞ்சித் எனும் சிறந்த கலைஞனின் படைப்புகள் கலை ரீதியாகவும் மிக முக்கியமானவைகளாக உள்ளன.

குறிப்பாக, பா. இரஞ்சித் இடம் உலகப் புகழ்பெற்ற கலை இலக்கிய கோட்பாடான ‘மாய எதார்த்தவாதம்’ குறித்த மிகுந்த ஆர்வம் இருந்ததை பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும். ‘குதிரைவால்’ போன்ற படங்களை அவர் தயாரித்ததற்கு காரணமும் அதுவே. தற்போது வெளியாகியுள்ள ‘ தங்கலான் ‘ திரைப்படத்தில் அதன் வெளிப்பாடு மிக அதிகமாகவே தெரிந்ததைக் காண முடிந்தது.

Thangalaan review: Vikram delivers a spellbinding performance in this Pa Ranjith film - Hindustan Times

ஒன்லைன்:

கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை தேடிக் கண்டுபிடிக்க விக்ரம் மற்றும் அவரது கிராமத்தினரை நாடுகிறார் ஆங்கிலேயரான டேனியல். சொந்த நிலத்தில், பண்ணை அடிமையாக இருப்பதற்கு வெள்ளைக் காரனிடம் தகுந்த கூலிக்கு வேலை செய்யலாம் என நினைத்து ஊர் மக்களுடன் உதவி செய்ய ஒப்புக் கொள்கிறார் விக்ரம். ஆனால், அந்தப் பகுதியை ‘ ஆரத்தி ‘ என்கிற வனதேவதை காத்து வருகிறாள் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. ஆக, விக்ரம் தன் மக்களின் துணையோடு சுரங்கத்தை கண்டுபிடித்தாரா? யார் அந்த ‘ஆரத்தி’ ? எதற்காக அந்த தேவதை இந்தத் தங்க சுரங்கத்தைக் காக்க வேண்டும் போன்ற விஷயங்களைச் சொல்வதே ‘தங்கலான்’ திரைப்படத்தின் கதை.

அனுபவ பகிர்தல்:

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, தொழில் நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் ஓர் மிகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சரியான நடிகர் தேர்வு. இவை அனைத்தும் அந்த வாழ்வியலை நாம் அப்படியே நேரில் காணும் ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் சில அரசியல் மற்றும் வரலாற்று சார்ந்த குறியீடுகள் நமக்கு சுவாரஸ்யம் தந்தது. அவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உருவாக்கியது.

தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான மாய எதார்த்தவாத திரை மொழியில் ஒரு வரலாற்று கதையை பார்க்கும் அனுபவம், படத்தின் பல கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதிக்க தூண்டுகிறது.

ஜீவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் படத்தின் ஒலிப்பதிவு சேர்ந்து இயக்குநர் நினைக்கும் உணர்வை நமக்குக் கடத்துகிறது. இந்தப் படத்தை நல்ல ஒலிவசதி உள்ள திரையரங்கில் பார்த்தல் நன்று.

விரிவான விமர்சனம்:

படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை அந்தக் கதை உலகிற்குள் அழைத்து செல்கிறார் பா.இரஞ்சித். இதற்கு முக்கியக் காரணம் நேர்த்தியான தொழில் நுட்பம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. நடிகர் விக்ரம், தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறுவதோ, எழுதுவதோ புதிதான விஷயம் அல்ல. அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றலின் உச்சத்தை ஏற்கனவே நிரூபித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் அவரது உடல்மொழி, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்தும் கச்சிதம் என்பதைத் தாண்டி சர்வதேச தரம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த பார்வதி, கணவனிடத்து அதிகாரம் காட்டுவது, பின் கொஞ்சிக் கொள்வது என அந்த வாழ்வியல் சார்ந்த பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, முதன் முதலாய் ரவிக்கை கட்டும் போது அவர் உடல் எவ்வாறு உணர்ந்தது என்பது வரை நமக்கு பாவனைகளில் கடத்துகிறார்.

படத்தில் நடித்த ஹரி கிருஷ்ணன், பிரீத்தி கரண், அர்ஜுன் போன்ற நடிகர்களின் திறமைக்கு இதையடுத்து நிச்சயம் தகுந்த பாத்திரங்கள் அவர்களை வந்து சேர வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நம்மை பெரிதும் கவர்ந்தது பசுபதியின் கதாபாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம், பசுபதியின் நடிப்பு என அனைத்தும் நம்மால் ரசிக்க முடிந்தது.

இன்னும் சொல்லப் போனால் படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது கூட நமக்கு வராத உணர்ச்சி, பசுபதி கதாபாத்திரம் இன்னோரு பாத்திரத்தை அடிக்கும் போது ஏற்படுகிறது.

ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன், சண்டைக் காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்தது தெரிகிறது.

நடிகர்களின் நடிப்பு இவ்வளவு நேர்த்தியாக வெளிப்பட்டதற்கு மற்றொரு காரணம் கிஷோரின் ஒளிப்பதிவு. குறிப்பாக விக்ரம் – பார்வதி காதல் காட்சி, விக்ரம் கம்பீரமாக வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி என பல்வேறு காட்சியை மெருகூட்டுவது ஒளிப்பதிவு தான்.

தலை இல்லா புத்தர் சிலை, ஆடை அரசியல், நிலத்தின் அரசியல், சாதி அரசியல் என இரஞ்சித் பேசும் அனைத்து விஷயங்களையும் படத்தின் சின்னச் சின்னக் கூறுகளாக வைத்தது இரஞ்சித்திடம் எப்போதும் இருக்கும் தனிச் சிறப்பே.

ஆனால், படத்தின் முதன்மை கதாபாத்திரம் முதல் பசுபதி பாத்திரம் தவிர்த்து எந்த கதாபாத்திரத்துடனும் நம்மால் ஒட்ட முடியவில்லை. படத்தின் முதல் பாதி வரை எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாமல் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பாகிறது.

படத்தில் பேசப்படும் மாய எதார்த்தாவாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப் புதுமையானது என்பதால் படத்தின் மைய சித்தாந்தத்திற்கே எதிரான சில புரிதலை மக்களுக்குக் கடத்த நேரிடுமோ என்கிற எண்ணம் சற்றுத் தோன்றியது.

எதார்த்தவாதத்தில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடு, வரலாற்று கொடுமைகள் போன்ற விஷயத்தை மாய எதார்த்தவாத கதை சொல்லல் முறை கொண்டு சொல்ல வினைந்தது சரியாக ஒன்று சேரவில்லை.

ஆக, படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களோடு ஒட்டாமல் நகர்கிறது. அடுத்தடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை. படத்தின் பல்வேறு கூறுகள் கலை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்து பார்க்கக் கூடிய அளவிற்கு படைத்திருந்தாலும் அதில் இருக்கும் சுவாரஸ்ய குறைவு நம்மை நெருடுகிறது.

மொத்தத்தில் இந்த ‘ தங்கலான் ‘ நமக்குத் தரும் புது அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து நேர்த்தியான திரைக்கதையோடு தந்திருந்தால் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தத் திரைப்படம் தரும் அனுபவத்திற்காக நிச்சயம் அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஷா

”பாமகவில் இருந்து தலித் முதல்வர்” : அன்புமணி ஆஃபர்!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share