17-வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடரில் இன்று முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (மே 11) தொடங்கியது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்குமார், சி.டி.நிர்மல்குமார், டி.கே. பிரபு உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவாகப் பதவியேற்றார். முன்னதாக சட்டசபை அரங்கிற்குள் நுழைந்த முதல்வர் விஜய்யும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். ஆனால் முதல்வர் இருக்கையில் விஜய்யும், எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்தனர். ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் முகத்தை பார்ப்பதையும் தவிர்க்கும் வகையில் நடந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார்.
அவரும் முதல்வர் விஐய்யை பார்ப்பதை தவிர்க்கும் வகையில் நடந்து கொண்டார். அதேபோல், போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எம்எல்ஏவாகப் பதவியேற்றார். அவர் பதவி ஏற்க வந்தபோதே விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார். முதல்வர் விஜய்யும் சிரித்த முகத்துடன் பதில் வணக்கம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஒருவர் ஒருவராகப் பதவியேற்று வருகின்றனர்.
