உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia-வின் தலைவர் ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததாக வெளியான தகவல் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரை சென்றுள்ள நிலையில், ஜென்சன் ஹுவாங்கிடம் அவர் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவின் Nvidia. ChatGPT உள்ளிட்ட AI சேவைகளை இயக்குவதற்குத் தேவையான அதிநவீன சிப்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங், உலகத் தொழில்நுட்பத் துறையில் செல்வாக்குமிக்க தொழிலதிபர்களில் ஒருவர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே AI தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், Nvidia தயாரிக்கும் சிப்கள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான தொழில்நுட்பமாகப் பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரைச் சேர்ந்த Megaspeed நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியாக இருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல்கள் வெளியான பின்னர், தனது மனைவிக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்பதை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதாகவும், தனது செயல்களுக்குப் பொறுப்பேற்று குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சர்ச்சை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரை சென்றுள்ளது. ஜென்சன் ஹுவாங்குடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அவருடன் உறவில் இருந்த பெண் சீன உளவாளி என்பது அவருக்குத் தெரியுமா என்று நேரடியாகக் கேட்டதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண் உளவாளி என்பது தனக்குத் தெரியாது என்று ஜென்சன் ஹுவாங் பதிலளித்ததாகவும், அவரது விளக்கத்தைத் தான் நம்புவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன AI தொழில்நுட்பங்கள் சென்றிருக்குமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஜென்சன் ஹுவாங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியாக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்துள்ளது.









