“தமிழர் பிரதமராவதை தடுத்தனர்” : மூப்பனார் நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

Published On:

| By Kavi

மூப்பனார் பிரதமராவது தடுக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் நிறுவனரான மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், “எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த தேசியக் கட்சித் தலைவராக இருந்தவர் மூப்பனார். அவர் எப்படிப்பட்ட ஒரு ஆளுமை. அவருக்கு நாடளவில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. 

ADVERTISEMENT

அவர் ஒரு வார்த்தை சொன்னால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.   அப்படிப்பட்ட ஆளுமை மிக்க அவருக்கு பிரதமர் பதவியை வகிக்கும் வாய்ப்பும் உண்டானது. ஆனால்  அந்த வாய்ப்பை அவர் பெறாதபடி தடுத்த சக்திகள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். 

இன்று தமிழ்நாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் என்று திருப்பி, திருப்பி  பேசுபவர்கள், ஒரு தமிழன் பிரதமராவதை தடுத்தார்கள். இதையெல்லாம் மறந்துவிட முடியாது.  மூப்பனார் பிரதமராவது தடுக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று நான் கருதுகிறேன். 

ADVERTISEMENT

ஆனால் இது அரசியல் பேசும் இடமல்ல. புகழஞ்சலி செலுத்த  வந்துள்ளோம். ஆனால் ஒரு சின்ன அரசியல் மட்டும் பேசிக்கொள்கிறேன். 

தமிழகத்தில் மூப்பனாரின் கொள்கைக்கு ஏற்ப நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். 

வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சக்தி நம் எல்லோரிடமும் இருக்கிறது. மக்கள் நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஒன்றிணைந்து அந்த முயற்சியை இந்த கூட்டணி மூலம் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

நல்லாட்சி வேண்டும்… போதைப்பொருள்கள் வேண்டாம்… ஒரு குடும்பம் மட்டும் பிழைத்து கொண்டிருக்கிறது.  சாராயம் வேகமாக பரவுகிறது. தமிழக மக்களுக்கு ஆதரவு இல்லை என்ற நிலை இருக்கிற போது, அந்த மக்களுக்காக  தொண்டாற்றுவது நமது கடமை என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share