மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஆகஸ்ட் 11-ந் தேதி கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: 2004-ம் ஆண்டுக்குப் பின் ஆயுதப் படை தவிர இதர மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) ஒன்றையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 25 ஆண்டுகள் அரசுப் பணியை நிறைவு செய்தவர்கள் இதில் இணையலாம். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலனடைவோரும் இதில் சேர முடியும். மத்திய அரசுப் பணியாளர்கள் இந்த இரண்டில் ஒன்றில் இணைந்து கொள்ள முடியும்.
ஓய்வூதியத் திட்டங்களை எளிமையாக்க, நிதிச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்திய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பு இல்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.









