நெல்லை கொடூரம்: ஆணவக் கொலை வழக்கில் இருவர் கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

murder case

நெல்லை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளைப் பெற்றோரே விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தாய், தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவன் – வைரம்மாள் தம்பதி. இவர்களது மகள் அமுதா (20). அமுதாவிற்கும் அவரது அக்கா கணவருக்கும் இடையே முறை தவறிய பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அமுதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் நேற்று மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அமுதா தற்கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. அவரது காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த பெற்றோரே, அமுதாவிற்கு விஷம் கொடுத்துக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த மூலக்கரைப்பட்டி போலீசார், அமுதாவின் பெற்றோர் சிவன் மற்றும் வைரம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளைப் பெற்றோரே விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share