முதல்வர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் சில பகுதிகளில் போக்குவரத்து தடை மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தினசரி தலைமை செயலகத்துக்கு சென்று அலுவல் பணிகளை கவனித்து வந்த நிலையில் முதல் முறையாக இன்று (ஜூன் 1) வெளியூர் பயணம் மேற்கொண்டார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விஜய் தற்போது திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை துரை வைகோ எம்.பி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், மரக்கடை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தும் விஜய், மாலை 4.15 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
முதல்வர் விஜய் வருகையையொட்டி தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
காவல்துறை தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக திருச்சி காவிரி பாலத்தில் இன்று காலை 11 மணியளவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியின் வடக்கு பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் திருவானைக் காவல் மாம்பழச் சாலையோடு நிறுத்தப்பட்டன. அதுபோன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் காவிரி பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையம் வரை டிக்கெட் எடுத்திருந்தாலும் மாம்பழச் சாலையோடு மக்கள் இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் பொதுமக்களுக்கும் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாம்பழச்சாலை முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளோடு நடக்க முடியாமல் 2 கிமீ வரை நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் வேதனையடைந்த பயணிகள், “நல்ல மாற்றம் சிஎம் சார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இதற்கு பதில் சொல்வாரா. காலையில் இருந்து மக்களை நடக்க வைப்பதா?” என கேள்வி எழுப்புகின்றனர்.
