உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மோகனா. இவர் வரும் 2031 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.
இவருடன் சேர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அருண் பல்லி ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், “மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
