இளம்பெண் மீது காரை ஏற்றி கொலை: பாரில் நடந்தது என்ன? உடன் சென்ற இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விதிமுறைகளை மீறியதாக அந்த மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திட்டமிட்டு எங்கள் மீது காரை ஏற்றியதால் தான் யான்சி உயிரிழந்தார் என அவருடன் சென்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் யான்சி (18). இவர் சென்னையில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு வந்து, தோழியின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் , 17 வயது சிறுமியான தனது தோழி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றிற்கு யான்சி சென்றுள்ளார். மறுபுறம், அதே பாருக்கு சுமந்த் சக்திவேல் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

ADVERTISEMENT

அங்கே மது அருந்திவிட்டு நடனமாடும் போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றியுள்ளனர். நள்ளிரவில் வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நீடித்துள்ளது. பின்னர் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சுமந்த் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கிளம்பியுள்ளனர். யான்சியும் அவரது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த சுமந்த் சக்திவேல், காரை வேகமாக ஓட்டிச் சென்று கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மோதியுள்ளார். இந்த கொடூர விபத்தில் யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்து வந்த 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

விபத்தை ஏற்படுத்திய சுமந்த் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பின்னர், புதுச்சேரியில் பதுங்கியிருந்த சுமந்த் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை புதுச்சேரி போலீசாரின் உதவியுடன் சென்னை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, சென்னை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த சுமந்த் சக்திவேலின் நண்பர்களான பாலகுரு மற்றும் கிஷோர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கினர். துணை ஆணையர் மணிகண்டன் மேற்பார்வையில், விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட ‘சென்னை கேட்வே’ (FL3) மதுபான விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட இந்த மதுபான விடுதியின் உரிமையாளர் பாலாஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விருப்பமனு அளித்திருந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, உயிரிழந்த இளம்பெண்ணுடன் சென்ற இளைஞர் அளித்த வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தனது வாக்குமூலத்தில், “நாங்கள் இரவு 9:30 மணி அளவில் ஒரு பப்-க்கு சென்றோம். எனக்கு 21 வயது. என்னுடன் வந்தவர்களில் ஒரு பெண்ணிற்கு 19 வயது, மற்றொரு பெண்ணிற்கு 17 வயது. எங்களுடன் வந்த மற்றொரு பையனுக்கு 19 வயது. அந்தப் பெண்கள்தான் எங்களை அழைத்துச் சென்றனர். பப்-க்கு ஜோடியாகச் சென்றால் என்ட்ரி இலவசம் என்பதால் நாங்கள் அப்படிச் சென்றோம். அங்கு பெண்கள் இருவரும் மது அருந்தினர். அதில் சிகிச்சை பெற்று வரும் பெண் அமைதியாக அமர்ந்துவிட்டார். மற்றொரு பெண் டான்ஸ் ஆடத் தொடங்கினார். அப்போது மற்றொரு கும்பல் டான்ஸ் ஆடிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது.

அந்தப் பெண் என்னிடம் வந்து சொன்னதால், நான் அந்தக் கும்பலிடம் சென்று “கொஞ்சம் தள்ளி ஆடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு “நீ யார்?” என்று கேட்டு என்னைத் தாக்கினார்கள். உடனே நான் பவுன்சர்களிடம் சென்று சொன்னேன். ஆனால் அவர்கள் “நீ வெளியே பார்த்துக்கொள்” என்று சொல்லி விட்டார்.

அந்தப் பிரச்சினை முடிந்தவுடன், வெளியே வேறொரு கும்பலுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். பெண்களை பேருந்து ஏற்றி அனுப்புவதற்காக நாங்கள் நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றோம்.

அப்போது, எங்களோடு மோதிய கும்பல் வந்த கார் மீது இரண்டாவதாக பிரச்சனை ஏற்பட்ட கும்பலில் இருந்தவர்கள் கல் வீசி உள்ளனர். கல் எறிந்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட, காரில் இருந்தவர்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். ‘இந்தப் பெண்ணால்தான் இவ்வளவு பிரச்சினை’ என்று நினைத்துக்கொண்டு, முதலில் எங்களது வாகனத்தின் மீது காரை மோதினர். நாங்கள் கீழே விழாததால், மீண்டும் துரத்தி வந்து இரண்டாவது முறையாகப் பலமாகத் தாக்கினர். அதில்தான் அந்தப் பெண் படுகாயமடைந்து உயிரிழந்தார்.” என தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் பாரில் மது பரிமாறப்பட்ட போது ஏற்பட்ட மோதலே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மதுபான பாருக்குள் தங்களுடன் 17 வயது சிறுமியும் வந்ததாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், 17 வயது சிறுமி எப்படி மதுபான பாருக்குள் அனுமதிக்கப்பட்டார் என்ற பலத்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share