இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு (NEET) இன்று ஜூன் 21-ந் தேதி நடைபெறுகிறது.
நீட் நுழைவுத் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து மே 3-ம் நடந்த நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
நீட் மறு தேர்வு
இதனால் இன்று ஜூன் 21-ந் தேதி மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், நிர்வாக நடைமுறைகளுக்காக (attendance, verification) 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5,440-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 307 மையங்களில் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க தேசிய தேர்வு முகமை (NTA) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களுக்கு வினாத்தாள்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல இந்திய விமானப் படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்ட வினாத்தாள் பெட்டிகள், அங்கிருந்து திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த வினாத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் முத்திரையிடப்பட்டு (Sealed), பலத்த ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை பாதுகாப்போடு வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டன.
தேர்வு நடக்கும் இன்றைய நாளில், தேர்வு மையங்களில் எந்தவிதமான தகவல் பரிமாற்றமும் நடைபெறாமல் இருக்க டெலிகிராம் (Telegram) செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகக்கடுமையான உடற்சோதனைகள் (frisking) மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்கள் மொபைல், ஸ்மார்ட் வாட்ச், நகைகள் மற்றும் கனமான ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிமையான மற்றும் மெல்லிய ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காலணிகளைப் பொறுத்தவரை குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 (இன்று) மறுதேர்வு அறிவிக்கப்பட்ட இடைப்பட்ட 37 நாட்களில், நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கோயம்புத்தூர் அனு கீர்த்தனா (19), சேலம் கோபிகா ஆகியோர் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு குறித்த பயம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
