திடலுக்கு போகும் போலீஸ்! திருப்பதிக்கு போகும் பட்ஜெட்! மக்களை மதிக்காத மர்மமான முதலமைச்சர்! என்னதான் நடக்கிறது திராவிட நல் தமிழ்நாட்டில்?

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

Neet exam Police heading to periyar grounds! Tamilnadu Budget heading to Tirupati!

ராஜன் குறை

உலக அரசியல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது! இந்திய அரசியல் நிலையும் கலவரமாகத்தான் இருக்கிறது! இப்போது என்ன பிரச்சினையென்றால், பொதுவாக நிலையான அரசியலும், நீடித்த பொருளாதார வளர்ச்சியும் கொண்ட திராவிட நல் தமிழ் நாட்டிலும் அலங்கோல ஆட்சி நடக்கத் தொடங்கியுள்ளதுதான்!

இந்தியாவில் ஜென் ஸீ தலைமுறை முதியோருக்கு அரசியல் பாடமெடுக்கும் கரப்பான் பூச்சி வடிவமெடுக்கிறது என்றால், தமிழ் நாட்டில் ஒரு ஜென் ஸீ கும்பல் நடிகரின் தற்காதல் பிம்பத்தை துரத்திச் சென்று மடியும் விட்டில் பூச்சிகளாக வெளிப்பட்டு வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது!

ADVERTISEMENT

இளைய தலைமுறைக்கே ஒரு அவப்பெயரை தமிழ்நாடு தந்துவிட்டது! நடிகரைக் காணச்சென்று நசுங்கிச் சாகும் கும்பல் எங்கே, ஜந்தர் மந்தரில் போலீஸ் தடியையும் வெறுங்கையால் தடுத்து நிறுத்தும் வீராங்கனைகள் எங்கே! மக்களை நடிக பிம்ப வெறியேற்றி மயக்கிய ஊடகங்கள் இதற்கும் பழியை திராவிட இயக்கத்தின் மீதே போடுவதுதான் வேடிக்கை.

விஜய் ஆட்சி புரட்சி செய்யாவிட்டால் பரவாயில்லை! ஆனால் ஒரு அரசியல் விபத்தாக அல்லவா மாறி வருகிறது? ஒவ்வொரு வாரமும் அரங்கேறும் அலங்கோலங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது! இங்கே நடப்பது என்னவென்றே ஒருவருக்கும் விளங்காத மர்மமாக இருக்கிறது! அதற்கெல்லாம் மையத்தில் எதையும் பொருட்படுத்தாமல் பதுங்கி வாழ்கிறார் பேசாப் பதுமை முதலமைச்சர் ஜோசப் விஜய்!

ADVERTISEMENT

அவர் ஏதாவது பேசினால்தானே நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் அவருக்குத் தெரியுமா என்பதே மக்களுக்குப் புரியும்? எந்த பிரச்சினைக்கும் வாயைத் திறக்காவிட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்றே யாருக்கும் தெரிவதில்லை. தலையறுந்த கோழி போல அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆளாளுக்கு ஏதோ பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஆட்சியின் குளறுபடிகளை விமர்சிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதைப்பற்றி ஆளும் கட்சி-அது இன்னும் கட்சியாகவே வடிவெடுக்கவில்லை-ஆளும் கூட்டம் கவலைப் படுவதில்லை.

இத்தனைக்கும் நடிகர் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் சிலவற்றின் ஆதரவுடன்தான் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவர் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. ஆனால் ஒன்றியத்தில் காங்கிரஸ் பாஜக-வுடன் கடுமையாக மோதினாலும், தவெக பாஜக குறித்து மூச்சுவிடாது. காரணம் ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கண்டு பயம். பாஜக ஆதரவாக பேசினால் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டு விடும். அதனால் அதைக் கண்டும் பயம். அதனால் எதைக் குறித்தும் பேசுவதில்லை. ஆனால் செய்யும் செயல்களெல்லாம் பாஜக-வையும் மிஞ்சும் சங்கித்தனமான செயல்கள்தான். ஒரு சிலவற்றை பரிசீலிப்போம்.

ADVERTISEMENT

திடலுக்குச் சென்ற போலீஸ்

நீட் தேர்வு முறைகேடுகளை ஒட்டி டில்லியிலும், வட மாநிலங்களிலும் எழுந்துள்ள இளைஞர்கள் எழுச்சி பாஜக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் அதன் நீண்டகால கோரிக்கையான நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும், அதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் போராடியது இயற்கை.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு அதனைக் கண்டு அச்சம். எங்கே ஒன்றிய பாஜக அரசு தன்மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற பயம். அதனால் அந்த போராட்டங்களை பல இடங்களில் தடுக்கவும், ஒடுக்கவும் முற்பட்டார். அவருக்கும் இந்த போராட்டங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒன்றிய அரசிற்குத் தெரிய வேண்டுமே.

வாய்திறந்து பேசவே அஞ்சும் நடிகர் பேச்சுக்குக்கூட நீட் விலக்குக் கோரிக்கையை ஆதரித்து அறிக்கை விடவில்லை. அவர் ரசிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் கிடையாது என்பதால் அவர்களையும் போராடச் சொல்ல முடியாது. அவர்களுடைய ஒரே ஆசை விஜயை பார்ப்பதுதான். அதற்காக உயிரையும் கொடுப்பார்களே தவிர, மற்ற பொதுநல அரசியல் கோரிக்கைகளுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். விஜயும் அவர்களை அப்படி போராடச் சொல்ல மாட்டார். ஏனெனில் அவர்கள் அரசியல் மயமாகிவிட்டால் பிறகு அவர் பின்னால் ஓடிவர மாட்டார்கள் என்ற அச்சம் இருக்குமல்லவா?  

இதன் உச்சகட்டமான நிகழ்வுதான் திராவிடர் கழகத்தின் நீட் தேர்வு, பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எதிரான பிரசார பயணத்திற்குத் தடை விதித்தது. திராவிடர் கழகத்தின் பிரசாரங்கள் முழுக்க முழுக்க அமைதி வழியில் நடப்பவை. பெரியாரே சில சட்டம் மீறிய குறியீட்டு எதிர்ப்பு வடிவங்களைக் கொண்ட போராட்டங்கள் நட த்தியபோது கூட தொண்டர்கள் பொது அமைதியைக் குலைக்கும் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள்.

தி.க. தொண்டர்கள் சிறை நிரப்புவார்கள். அவர்கள் மீதான தாக்குதலை அறவழியில் எதிர்கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியோ, அமைதிக்கு பங்கம் விளைவித்தோ செயல்பட மாட்டார்கள். அவ்விதம் செய்வதை காலித்தனம் என்றே கருதக் கூடியவர் பெரியார்.

அப்படிப்பட்ட உயர் மரபைக் கொண்ட பண்பாட்டு இயக்கமான திராவிடர் கழகத்தின் பிரசார பயணத்தை நடிகர் விஜய் அரசு தடை செய்ததுடன், பெரியார் திடலுக்கு காவல்துறையினரை அனுப்பி அங்கே யாரும் தடையை மீறி செயல்படவிடாமல் தடுத்தது. ஆசிரியர் வீரமணி நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று பிரசாரம் செய்வோம் என்ற முதிர்ச்சியான முடிவை எடுத்துவிட்டார். பிரச்சினை என்னவென்றால் எதனால் விஜய் திடலுக்கு காவல்துறையை அனுப்பும் அளவிற்குச் சென்றார் என்ற கேள்விதான். யாரை மகிழ்விக்க இதனை செய்கிறார்? எந்த அச்சத்தால் இதனைச் செய்கிறார் என்பதே கேள்வி.   

தமிழ்நாட்டின் நீட் தேர்வு எதிர்ப்பின் பின்னணி

நீட் தேர்வை பாஜக நீங்கலாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எவையும் ஏற்கவில்லை. ஏனெனில் தமிழ்நாடு கல்வி, பொது சுகாதாரம் இரண்டிலும் நாட்டிலேயே தனிப்பாதை அமைத்து முன்னேறிய மாநிலம் என்பதுதான். அதற்குக் காரணம் அதன் சமூக நீதித் தன்னுணர்வு. பெரியார் விதைத்த பகுத்தறிவு. ஒன்றிய அரசே தரும் புள்ளிவிவரங்கள் இந்த வித்தியாசத்தை ஐயத்திற்கு அப்பால் எடுத்துச் சொல்லும். வட மாநிலங்களுக்கு இந்த வரலாறு கிடையாது என்பதால் அவர்களுக்கு நீட் தேர்வு முறைகேடுகள்தான் பிரச்சினையே தவிர, நீட் தேர்வே பிரச்சினையல்ல.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி அனைவரையும் உள்ளடக்கியதாக சிறப்பானதாக நடைபெற்று வந்தது. பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை உரிய இட ஒதுக்கீட்டுடன் நடைபெற்று வந்தது. இதில் அகில இந்திய அளவிலான ஒரு நுழைவுத் தேர்வை புகுத்தியது, கிராமப்புற, எளிய குடும்பத்து மாணவ, மாணவியருக்கு பெரும் இடையூறாக அமைந்தது. இந்த நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் திறன் பள்ளிக் கல்வியால் மட்டும் வருவதாக இல்லை. அதற்கென்று தனிப்பட்ட பயிற்சி தேவைப்பட்டது.

அதற்கென உருவான கோச்சிங் செண்டர் எனப்படும் தனியார் பயிற்சி நிலையங்களில் அதிக பணம் செலுத்தி பயிற்சி பெற வேண்டிய தேவை உருவானது. இந்த பொதுத்தேர்வும் ஒன்றிய கல்வி வாரியமான CBSE பாட திட்டத்தினை அனுசரித்து நடத்தப்பட்ட தால் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு உகந்ததாக இல்லை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கான முயற்சி குரூரமாக முடக்கப்பட்டது.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா பள்ளி இறுதித் தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். அவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் நீதி கிடைக்காத போது உயிர் நீத்தார். தமிழ்நாடே பொங்கி எழுந்தது. அதிலிருந்து எத்தனையோ சட்டப் போராட்டங்கள், அறப்போராட்டங்கள் சட்ட மன்ற தீர்மானங்கள் என தொடர்ந்தாலும் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் வன்மத்தால் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படாமல் அந்தத் தேர்வு தொடர்கிறது.

தமிழ்நாட்டில் அறுபதுகளிலிருந்தே திராவிட இயக்கத்தின் எழுச்சி காரணமாக உருவாகியிருந்த சமூக நீதி குறித்த விழிப்புணர்வு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே கல்வி கற்பது குறித்த ஆர்வத்தை முயற்சியை உருவாக்கியிருந்தது. அதனால் மருத்துவக் கல்லூரியிலும் எளிய குடும்பத்து மாணவர்கள் இடம்பெற்று வந்தார்கள். இதன் விளைவாக பொது சுகாதாரத்துறையும் சமூக அக்கறையுடன் செயல்படுவது சாத்தியமானது. ஏனெனில் எளிய பின்னணியிலிருந்து வந்த மருத்துவர்களே முக்கிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரும்போது அவர்கள் மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்த விழிப்புணர்வுடன் இயங்கினார்கள்.

நான் 2005-ஆம் ஆண்டு கள ஆய்விற்காக ஒரு குக்கிராமத்திற்கு சென்றபோது அங்கே ஒருவரை சந்தித்தேன். அவர் சாலைப்பணிக்காக ஒப்பந்தக்காரரின் உதவியாளராக வட மாநிலங்களில் பணியாற்றியிருந்தார். அவர் என்னிடம் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் என்ன வேறுபாடு என்று எளிமையாக விளக்கினார். “சார் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை. மருந்துகள், சிகிச்சை வசதிகள் இல்லை என போராடுவார்கள். வட மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் என்று ஒன்றை அரசு உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

இதைத்தான் அதே ஆண்டு தென் மாநிலங்களையும், வட மாநிலங்களையும் வளர்ச்சி, அரசியல் தன்னுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்ட பிரின்ஸ்டன் கல்லூரி பேராசிரியர் பிரேர்னா சிங்கும் தன் ஆய்வில் விரிவாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டு பொருளாதார ஆய்வாளர்கள் கலையரசனும், விஜய்பாஸ்கரும் எழுதிய Dravidian Model: Interpreting Political Economy of Tamil Nadu நூலிலும் சமூக நீதி தன்னுணர்வுக்கும், பொது சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்கி எழுதியுள்ளனர்.   

தமிழ்நாட்டின் சமூக நீதி தன்னுணர்வுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அதனால்தான் இந்த மாநிலத்தை பெரியார் மண் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட மாநிலத்தில் ஒன்றிய அரசு தன் மேலாதிக்க மனோபாவத்தினால் மக்கள் விரோத நீட் தேர்வை திணித்தால் எதிர்ப்பு உருவாகத்தான் செய்யும். தந்தை பெரியாரின் பணியை அவருக்குப் பின் அரை நூற்றாண்டுக்காலமாக செய்து வரும் ஆசிரியர் வீரமணி அந்த எதிர்ப்பின் நெருப்பை அணையாமல் காப்பது இயல்பே.

அதனால்தான் கடந்த பத்தாண்டுகளாக திராவிடர் கழகம் நீட் தேர்வை எதிர்த்து பலவிதமான பிரசாரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க முதலிலிருந்தே திராவிடர் தன்னுணர்வு என்னும் இரட்டைக் குழல் துப்பாக்கியில் திராவிடர் கழகத்தின் மற்றொரு குழல். அ.இ.அ.தி.மு.க அரசிற்கு தி.மு.க-வுடன் எத்தனை முரண்பாடு இருந்தாலும் திராவிடர் கழகத்தின் பிரசாரத்திற்கு இடையூறு செய்ய நினைக்க மாட்டார்கள்.  

நடிகர் விஜய் தனக்கு நிறைய ரசிகர்கள் உண்டு என்பதால் அவர்கள் ஆதரவில் அரசியல் கட்சி துவங்கி முதல்வராக ஆசைப்பட்டார். மக்களாட்சியில் அதற்கு தடை கிடையாது. ஆனால் அவருக்கு அரசியல் தன்னுணர்வு எல்லாம் கிடையாது என்பதால் சில ஆலோசகர்கள், பயிற்சியாளர்களை நியமித்துக் கொண்டார். அரியலூர் அனிதா உயிர் நீத்தபோது அவர் இல்லத்திற்கு அந்த ஆலோசகர்கள் அறிவுரையின் பேரில் சென்று, அவர்கள் கூறியபடியே தரையில் அமர்ந்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். அதிலிருந்து தனக்கும் நீட் தேர்வில் உடன்பாடு கிடையாது என்றும் கூறி வந்தார்.

அவர் கட்சி தொடங்கியபோது பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆதரவு கிடைக்காது என்பதால் கொள்கைத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்றார். ஆனால் வசதியாக அவருடைய கடவுள் மறுப்பில் உடன்பாடு கிடையாது; சமூக நீதி தத்துவத்தில் உடன்பாடு உண்டு என்று சொல்லிவைத்தார். அப்போதுதான் தன் நாயக பிம்ப வழிபாட்டையும், கடவுள் வழிபாட்டையும் இணைத்து பகுத்தறிவை பலியிட முடியும் என்ற அவர் ஆலோசகர்களின் வழிகாட்டுதல்தான் காரணமாக இருக்கலாம். அவருக்கு சொந்தமாக அந்த அளவு சிந்திக்கத் தெரியும் என்பதற்கான சான்றுகள் எதுவும் இன்றுவரை கிடைக்கவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றதும் திடலுக்குச் சென்று ஆசிரியரிடம் ஆசிகூட பெற்றார்.

இவ்வளவும் செய்துவிட்டு எதற்காக பிரசாரப் பயணத்தை முடக்க வேண்டும்? திடலுக்கு போலீசை அனுப்பவேண்டும்? விஜய்க்கே இதெல்லாம் தெரியுமா, இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதே ஒரு மர்மம்தான். ஏனெனில் அவர்தான் பேசுவதே இல்லையே.

திருப்பதிக்கு சென்ற பட்ஜெட்!

ஒரு பக்கம் திடலுக்கு போலீஸ் சென்றால், மறுபக்கம் வேளாண்துறை அமைச்சர் அவர் தாக்கல் செய்யப்போகும் வேளாண் துறை நிதிநிலை அறிக்கையின் வரைவு நகலுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று, அதனை சந்நிதியில் வைத்து வழிபட்டுள்ளார். அது முழு நகலா, குறிப்புகளா என்பதல்ல பிரச்சினை. எதற்காக அரசு ஆவணத்தை கோயிலுக்கு எடுத்துச் செல்கிறார் என்பதுதான் கேள்வி.

மதச்சார்பின்மை என்றால் என்ன? தனி நபர்களுக்கு மத நம்பிக்கை இருக்கலாம். அரசிற்கு எந்த ஒரு குறிப்பிட்ட மதச்சார்பும் இருக்கக் கூடாது என்பதுதானே? இவர் திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் சென்றால் நிதியமைச்சர் வேளாங்கண்ணிக்கு எடுத்துச் செல்வாரா? அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அதில் இறைநம்பிக்கை இல்லாத பெரியாரியர்களும் இருப்பார்கள். அவர்கள் மனமெல்லாம் இது போன்ற செயல்களால் புண்படாதா? நானும் ஒரு வாக்காளன்தான். எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. என்னுடைய அரசு எப்படி நிதிநிலை அறிக்கையை ஆலயத்தில் வைத்து வழிபடலாம்? இது என்ன அமைச்சர் வினோத்தின் இல்ல நிகழ்ச்சியா?

மேலும் இறைநம்பிக்கையாளர்களே இவ்விதம் செய்ய மாட்டார்கள். மூதறிஞர் ராஜாஜி இருந்தார். அவர் இறை நம்பிக்கையாளர்தான். ஆனால் அவர் இதைச் செய்ய மாட்டார். ஏனெனில் இறை நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு. இறை நம்பிக்கை இருந்தால் மனதினுள் வழிபடலாம். அமைச்சர் தனிப்பட்ட முறையில் கோயிலுக்கு சென்று வரலாம். அரசு ஆவணத்தை அங்கு கொண்டு செல்வதன் தேவை என்ன? இது மூட நம்பிக்கை; இறை நம்பிக்கையல்ல. மனிதனின் செயல்களுக்கு கடவுளைப் பொறுப்பாக்குவது மூட நம்பிக்கை. தங்கள் செயலுக்கு மனிதர்கள் பொறுப்பேற்க வேண்டும்; அவர்கள் ஆற்றலை மீறிய செயல்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டலாம். இந்த வேறுபாடு கூட தெரியாத ஒரு கூட்டம்தான் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளது. அவமானம்.

கர்நாடக விஜய மர்மம்!

ஜூன் 12 விவசாயத்திற்கு திறந்துவிட மேட்டூர் அணையில் தண்ணீரில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தவிக்கிறார்கள். திருப்பதி சென்ற வேளாண் அமைச்சர் வினோத் டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லவில்லை. விவசாயிகள் துயரை அறியவில்லை; துயர் நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதில் முதல்வர் விஜய் பெங்களூர் போகப் போகிறார் என்றார். உடனே அமைச்சர் ராஜமோகன் முரண்பட்டு முதல்வரே சொன்னால்தான் அது உறுதியான தகவல். பிறர் கூறினால் அதை நம்பவேண்டாம் என்றார்.

அதையடுத்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் விஜய் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்கிறார். நான் ஹெலிகாப்டர்கள் தயாராக வைத்துள்ளேன். அவரைக் கூட்டிச் சென்று வறண்ட நிலங்களைக் காட்டுகிறேன் என்றார். உடனே தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி தலைவர்களும் காவிரி ஆணயம் தீர்ப்பு வழங்கிய பிறகு எதற்கு பேச்சுவார்த்தை, முதலில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லவேண்டும் என்று அறிக்கை விட்டார்கள். அதற்கும் விஜய் எதுவும் கூறவில்லை.

அடுத்த நாள் விஜய் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசுகிறார்; பதிமூன்று பேர் கொண்ட குழு பெங்களூர் செல்லப்போகிறது என்று கூறப்பட்ட து அல்லது தகவல் கசியவிடப்பட்டது. அதுவும் அதிகாரபூர்வமான தகவல் அல்ல. மதியம் டி.கே.சிவகுமார் இப்போதைக்கு விஜய் வருவது நல்லதல்ல. இங்கே சூழ்நிலை சரியில்லை என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை.

காவிரி பிரச்சினை என்ன விஜயின் சொந்த திரைப்பட விவகாரமா? அவர் தன் விருப்பப்படி திட்டமிட?  முதல்வர் என்பவர் மன்னரல்ல, மக்கள் ஊழியர். அவருடைய பதவி மக்கள் பொதுவெளி அலுவல் (public office). அவர் எடுக்கும் முடிவுகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அண்டை மாநில முதல்வர் சொல்லித்தான் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் விஜய்க்கும் அவர்களுக்கும் என்ன உறவு? எது என்ன அகந்தையா, அறியாமையா?

முதல்வர் விஜய்க்குத்தான் பேச வராது. அரசு செய்திக்குறிப்பாவது வெளியிடலாமே? கர்நாடக முதல்வரிடம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பு வெளியிடலாமே? முதல்வரின் பொதுவெளி செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லவா? இந்த அரசு செயல்படுகிறதா, எப்படி செயல்படுகிறது என்பதே மர்மமாக இருக்கிறது. தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் இன்னும் எத்தனை காலம் இதனை அனுமதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share