அண்ணாமலை விலகலால் பாஜகவிற்குப் பாதிப்பா? – நயினார் நாகேந்திரன் பதில்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

பாஜக முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி ‘We the Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை இன்று (ஜூன் 5) தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் புதிய இயக்கம் மற்றும் அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

ADVERTISEMENT

அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாகக் கூறியது குறித்த கேள்விக்கு, “அது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதுபற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது” என்றார்.

அண்ணாமலையின் விலகல் பாஜகவிற்கு இழப்பா? என்ற கேள்விக்கு, “பாஜக இன்று நேற்று ஆரம்பித்த கட்சி அல்ல. இது சித்தாந்த அடிப்படையிலான ஒரு பேரியக்கம். எனவே, அண்ணாமலை விலகியதால் பாஜகவிற்கு எந்தவித பாதிப்போ அல்லது இழப்போ நிச்சயமாக இல்லை” என்றார்.

ADVERTISEMENT

தேசிய கட்சிகள் மாநில மொழிகளில் பேசுவதில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழைப் பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும், தமிழின் பெருமையைப் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார். இப்போதுகூட நமது பாரம்பரியச் செப்பேடுகளை அவர் மீட்டு வந்துள்ளார். தமிழ் மக்கள் மீது பாஜக என்றும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது” என்றார்.

அடுத்த தேர்தலில் அண்ணாமலையின் இயக்கம் போட்டியிடும் என்று அவர் கூறியது குறித்த கேள்விக்கு, “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். அது அவர்களது உரிமை. அந்த உரிமை அனைவருக்கும் உள்ளது. எனவே, அது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share