பாஜகவில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கிய உள்ள We The Leaders இயக்கத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்தை கடந்து உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று சமூக வலைதளம் வாயிலாக பேசிய அவர், “நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள், குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில், “அண்ணாமலை, நீங்கள் தமிழனா, இந்தியனா?” என்று கேட்பார்கள். இது எனக்கு பெரிய கான்ஃப்ளிக்ட்டை ஏற்படுத்தக்கூடிய விஷயம். “Are you a Tamilian or are you an Indian?”தமிழ்நாட்டில் என் அப்பாவோ, அம்மாவோ… என் அம்மா தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே வந்ததே இல்லை. தமிழ்நாட்டில்தான் எப்போதும் இருந்திருக்கிறார்கள். என் பாரம்பரியம் முழுவதும் விவசாயக் குடும்பம். அப்பா சின்ன வயதில் ஒரு முறை மட்டும் தமிழ்நாட்டுக்கு வெளியே சென்று வந்திருக்கிறார். மற்றபடி ஆண்டாண்டு காலமாக அங்கேயே விவசாயம் செய்து வரும் குடும்பம்.
எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படிப்பதற்கு, பின்னர் டெல்லியில் இருப்பதற்கு, ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டு டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8-9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால்தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரிய தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன்.
இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெருமை மிகுந்த தமிழனாக இருக்க வேண்டுமென்றால் இந்தியன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன. ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால் – நான் இந்தியன் என்கிற அடையாளத்தோடு, ஒரு பெருமை மிகுந்த தமிழனாகவே எல்லா இடங்களிலும் இருக்கிறேன். இந்த இயக்கத்திலும் அப்படித்தான் இருப்பேன்.
நாம் ஆரம்பிக்கும் இந்த இயக்கத்தில் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சினையையும் முன்னிறுத்தி, சமரசமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாம் எல்லோரும் கொண்டு செல்ல வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு பல பிரச்சினைகளில் எல்லா தலைவர்களும் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டின் அடையாளத்தோடு தனியாகப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போக வேண்டும் என்பதற்காக அன்றைக்கு தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்கள் நிறைய பேரோடு பேசி அனுமதி அளித்தார்.அதேபோல் லோக்சபா தேர்தலிலும் தனியாகப் போக வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தமிழர் அடையாளத்தோடு களத்தில் நின்றால்தான் தமிழர் நலனை முன்னிறுத்தும் கட்சியாகவும், இந்திய அடையாளத்தோடும் இருக்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை.
டங்ஸ்டன், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கத்திக் கூச்சல் போடாமல், பொறுமையாக ஒவ்வொரு இடத்துக்கும் சென்று தீர்வு கண்டோம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு “அணை கட்டியே தீருவோம்” என்று சொன்னபோது, தமிழ்நாடு பாஜக தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் கான்ஃப்ளிக்ட்டை கத்திக் கூச்சலுடன் அணுக வேண்டிய அவசியம் இல்லை. பொறுமையாக, பேசி உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்பட முடியும் என்பதை எனக்குக் கிடைத்த ஒவ்வொரு பொறுப்பிலும் நான் நிரூபித்திருக்கிறேன்.
அதனால்தான் நான் நரேந்திர மோடி மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். அவர் நாட்டின் பிரதமர், நாட்டைப் பாதுகாக்கும் தலைவர். ஆனால் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தொடர்ந்து சேரும்போது, நாமும் தொடர்ந்து அவருக்கு பிரச்சினையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியே எடுத்துச் சென்று சொல்வதற்கு ஒரு அளவு இருக்கிறது.
அதனால்தான் கடந்த 18 மாதங்களாக பொறுமையாக, வெளியில் கூச்சல் போடாமல் கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் என் கருத்து வேறுபாடுகளைத் தெரிவித்து வந்தேன். டிசம்பர் 4, 2025 அன்று கட்சிக்கு தெளிவாகச் சொன்னேன் – “நான் கட்சியிலிருந்து வெளியே செல்ல இருக்கிறேன். இன்றே உங்களைத் தயார்படுத்த விரும்புகிறேன். நாளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதாக நினைக்க வேண்டாம்.” என்றேன். கட்சி சொன்னபடி தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, மே மாத இறுதி வரை பணியாற்றிவிட்டு வெளியே வருகிறேன்.
இனி நாம் அன்போடும் ஆனந்தத்தோடும் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குகிறோம். இது இயக்கமா, கட்சி இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம். கண்டிப்பாக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி போட்டியிடும். அதற்கு நாம் தயாராக வேண்டும். நிறைய தலைவர்கள், கேடர்கள், வாலண்டியர்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு திறன் வளர்க்க வேண்டும்.இதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். இயக்கமாகத் தொடங்கி, பலரை உள்ளே கொண்டு வந்து, அவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்து, எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய இயக்கமாக மாற்ற வேண்டும்.
நான் பாஜக மாநிலத் தலைவரான பிறகு முதன்முதலில் ஆசீர்வாதம் வாங்கச் சென்றவர், சமீபத்தில் மறைந்த நல்லகண்ணு ஐயா ஆவார்.இன்று மண் சார்ந்த அரசியல், நல்ல மனிதர்களின் கொள்கைகள், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும். அதிக அளவில் டெக்னோக்ராட்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம்.அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் போது Nvidia, Micron, Samsung, Intel, Google, Facebook போன்ற நிறுவனங்களில் Vice President பதவியில் இந்தியன் என்ற அடையாளத்தோடு ஒரு தமிழர்கள் இருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் திரும்பி வந்து தமிழ்நாட்டு அரசியலில் பங்களிக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு அவர்கள் எல்லோரையும் பயன்படுத்த வேண்டும்.
இதில் “நான் பெரியவன், நீ பெரியவன்” என்ற போட்டி இல்லாமல், ஒரு வளர்ந்த பாரதத்துக்குள் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு நமது அரசியல் மொழியை உள்ளிட்ட அனைத்தையும் மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி தேவைதான். மாற்றுக்கருத்து இல்லை. காரணம், டூத்பேஸ்ட் வாங்கும் அளவுக்கு கூட மக்கள் தரத்தைப் பார்த்து வாங்குகிறார்கள். அரசியலிலும் அதே தரத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.நாம் கல்ட் பாலிடிக்ஸிலிருந்து வெளியே வர வேண்டும். காமன் மேன் பாலிடிக்ஸை முன்னெடுக்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், போஸ்டர் அரசியல் ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.
ஒரு முதலமைச்சர் மட்டும் மாறினால் போதாது. 35 அமைச்சர்கள், 234 எம்எல்ஏக்கள், 39 எம்பிக்கள், 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து மட்டங்களிலும் நேர்மையான, திறமையான, சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும்.
ஒரு ஒரு குடும்பத்திற்கு மட்டுமானது அல்ல. அதேசமயம எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். “No chairs is permanent for anybody” – இது அனைவருக்கும் பொருந்தும். புதியவர்கள், புதிய ஐடியாக்கள் தொடர்ந்து வர வேண்டும்.
ஏற்கெனவே 2020-ல் தொடங்கிய “We The Leaders” இயக்கத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்துகிறோம். கோயம்புத்தூரில் ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தைத் தொடங்குகிறோம். அங்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவார்கள்.
நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாருடனும் வன்மம் இல்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மரியாதையோடு பார்க்கிறேன். நமது கொள்கையை மக்கள் முன் வைப்போம். மக்கள் தரத்தைப் பார்த்து தேர்வு செய்வார்கள்.நாகரிகமான அரசியல், பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு, நேர்மறை, பொறுமை – இவையே நமது பாதை. 42 ஆண்டுகள் வளைந்து நெளிந்து இன்று இந்த இடத்தில் உள்ளேன்.
நிச்சயமாக நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புரட்சியை மாற்றத்தை உருவாக்குவோம். இந்திய நாட்டிற்குள் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதுதான் நமது குறிக்கோள் வேறு எதுவும் இல்லை. அதற்காக வாழ்வை அர்பணிப்போம் ” என்றார்.
அண்ணாமலை பேசிய முடிந்த நிலையில் அவர் தொடங்கிய “We The Leaders”இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. முதல் ஒரு மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் இணைந்துள்ளனர்.
