நேரு vs மோடி: சர்ச்சையை கிளப்பிய ‘பிரதமர் பதவிக் கால’ கணக்கு – பின்னணி என்ன?

Published On:

| By Mathi

Modi vs Nehru: The Tenure Controversy Explained

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் சாதனையை முறியடித்தார்” என பாஜகவினர் கொண்டாடுவதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், “நீண்டகாலம் பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வரும் பிரதமர் மோடி”க்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 4,399 நாட்கள் ஆட்சிக் காலம் ஒரு பாராட்டுக்குரிய சாதனைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ADVERTISEMENT

ஆனால், ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துவிட்டார் எனக் கூறுவது தவறானது.

1947 முதல் 1952 வரை நேரு பிரதமராகப் பணியாற்றிய காலத்தை நாம் மறந்துவிட முடியுமா? அந்த வரலாற்றை எப்படிக் கடந்து செல்ல முடியும்?

ADVERTISEMENT

பாஜக தனது கணக்கீடுகளைத் தங்களுக்கு விருப்பமான வகையில் முன்னெடுப்பதைப் பற்றி நாம் கருத்து சொல்லத் தேவையில்லை. ஆனால், எந்தவித விளக்கமும் இன்றி பாஜகவின் சொல்வதை ஊடகங்கள் அப்படியே வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது.

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில், பாரத ரத்னா நேருவின் 17 ஆண்டுகால சாதனையை கௌரவிப்போம். 1947 முதல் 1952 வரை, ஜனநாயகத்தைத் தொட்டில் பருவத்தில் இருந்தே போற்றி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேருவை மட்டுமே சாரும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

”பிரதமர் பதவிக் கால கணக்கு”..என்ன சர்ச்சை?

”நரேந்திர மோடி, தொடர்ந்து பிரதமராக 4,399 நாட்களைக் கடந்துள்ளார். இந்திய வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த பிரதமரும் நீண்டகாலம் தொடர்ந்து பதவியில் இருந்தது இல்லை. நாட்டின் முதல் பிரதமர் நேரு 4,398 நாட்கள்தான் பதவியில் இருந்தார்” என்கிறது பாஜக. அதனாலேயே மத்திய அமைச்சரவை நேற்று மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றியது. உலக நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேருவின் (NEHRU) பிரதமர் பதவி காலம் எவ்வளவு?

ஆனால் ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருதான் அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர்; வரலாற்றை மாற்றக் கூடாது என்கின்றனர்.

அதாவது நாட்டின் பிரதமராக ஜஹவர்லால் நேரு

  • 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி வரை பதவி வகித்தார்.
  • இதனடிப்படையில் ஜஹவர்லால் நேரு நாட்டின் பிரதமராக வகித்த நாட்கள் 6,130.

பாஜகவோ, நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டுதான் நடைபெற்றது. அதனடிப்படையில்

  • 1952-ம் ஆண்டு மே 13-ந் தேதி முதல் 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி வரை மொத்தம் 4,398 நாட்கள் நேரு பிரதமராக இருந்தார்; ஆனால் மோடியோ, 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 4,399 நாட்களை கடந்து பணியாற்றுகிறார்.. அதனால்தான் நேருவின் சாதனையை முறியடித்துவிட்டோம் என்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர், “நாடு விடுதலை அடைந்தது தொடங்கி முதலாவது பொதுத் தேர்தல் வரையிலான நேருவின் பதவி காலத்தை தங்களது வசதிக்காக பாஜக கணக்கில் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டுகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share