பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது எழுத்தில் உருவான அனைத்து நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 11) வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்கள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையில் பாரதியாரின் படைப்புகளை டெல்லியில் இன்று மதியம் வெளியிட போவதாக மோடி இன்று காலை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மதியம் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சீனி விஸ்வநாதன் தொகுத்த ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பாரதியார் படைப்புகளின் நூல் தொகுப்பை மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ‘மகாகவி’ பாரதியார் குறித்து மோடி பேசுகையில் “தீவிர சிந்தனையாளரான சுப்பிரமணிய பாரதி இந்தியாவுக்காக கடுமையாக உழைத்தார்.
கொரோனா காலக்கட்டத்திலும் நாங்கள் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை அனுசரித்தோம்.
அவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நன்கு அறிந்தவர். அவருடைய காலகட்டத்தில் பல பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும் அவர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசினார்.
அவருக்கு அறிவியல் மீது நம்பிக்கை இருந்தது. அப்போதே அவர் காஞ்சிபுரத்தில் இருந்து காசியில் நடப்பதை பார்க்க ஒரு கருவி இருக்க வேண்டும் என்றார். அவரது ஆசைகள் இன்று நனவாகியுள்ளது. ” என்று மோடி பேசினார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் “மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டதற்கு பெருமைப்படுகிறேன்.

ஒரு வளமான இந்தியா மற்றும் தனிநபருக்கு அதிகாரமளித்தல் குறித்த அவரது தொலைநோக்கு பார்வை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வருகிறது.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!