ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!

Published On:

| By Aara

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், வட மாவட்டங்களில் முக்கிய தொகுதியான கள்ளக்குறிச்சியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கட்சி சாராதவர்கள், தொழிலதிபர்கள் மத்தியில் இன்னமும் ஒரு பேச்சு இருக்கிறது.

இந்தநிலையில், தேர்தலுக்கு பிறகு கள்ளக்குறிச்சி தொகுதியில் நிலவும் கணக்கீடுகள் பற்றி விசாரித்தோம்…

கள்ளக்குறிச்சி தொகுதியில் மொத்தமுள்ள 15 லட்சத்து 68 ஆயிரத்து 681  வாக்குகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில்  12 லட்சத்து 42 ஆயிரத்து 22 வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 79.18% வாக்குகள் இந்தத்  தொகுதியில் பதிவாகியிருக்கின்றன.

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் மலையரசனும், அதிமுக சார்பில் குமரகுருவும், பாமக சார்பில் தேவதாஸும் போட்டியிட்டனர்.

கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள், சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகள் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆறு தொகுதிகளிலுமே 77% முதல் 81% வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.

ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி 78.29%

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி  77.89%

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 79.58%

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி 77.48%

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி 79.46%

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி 81.68%

என்ற  வகையில் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் போடும் கணக்குகள் என்ன?

முதலில் அதிமுக தரப்பினரிடம் பேசினோம்.

“அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட குமரகுரு, எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அதுமட்டுமல்ல, இந்த தொகுதி முழுவதும் அறிமுகமானவர்.

நாங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக போகும் இடமெல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதை அவர்கள் கொடுத்த வரவேற்பிலேயே எங்களால் உணர முடிந்தது.

இந்த ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திமுகவில் உட்கட்சியிலேயே பிரச்சினைகள் இருக்கின்றன.

2019 இல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி. ஆனால், மீண்டும் பொன்முடி மகனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் பொன்முடி ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில்தான் இருந்தார். பொன்முடி தரப்பு கள்ளக்குறிச்சி தொகுதியில் முழுமையாக பணியாற்றவில்லை.

இந்தப் பக்கம் பொன்முடி என்றால், அந்தப் பக்கம் அதாவது சேலம் மாவட்டத்தில் இருக்கக் கூடிய பகுதிகளில் சேலம் கிழக்கு மாசெவான எஸ்.ஆர். சிவலிங்கம் தனக்கு சீட் கேட்டு கிடைக்காததால் அவரும் சரியாக வேலை செய்யவில்லை.

இப்படி கள்ளக்குறிச்சி தொகுதியின் இந்தப் பக்கத்தில் பொன்முடி, அந்தப் பக்கத்தில் எஸ்.ஆர். சிவலிங்கம் என உட்கட்சி அதிருப்தி அதிகம்.

அதேநேரம் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி தொகுதிகள் 10 வருடமாக அதிமுகவிடம்தான் இருக்கிறது. திமுக அங்கே வெற்றி பெறவே முடியவில்லை. அங்கெல்லாம் எங்களுக்கு அதிக பலமாக இருக்கிறது” என்கிறார்கள்.

திமுக தரப்பில் பேசினோம்.

“அதிமுகவில் வேட்பாளர் தேடித் தேடி யாரும் முன் வராத நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிகவுக்கு கொடுக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்தது. ஆனால், தேமுதிகவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால்… வேறு வழியின்றி போட்டியிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் மாசெவும் தனக்கு வேண்டியவருமான குமரகுருவிடம், ‘நீங்களே நில்லுங்க’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

ஆனால், குமரகுருவோ 2024 எம்பி தேர்தல் வேண்டாம், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் எனது இலக்கு என்று சொல்லி முதலில் மறுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் குமரகுருவின் செல்போனே ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

இதன்பிறகு சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரான ஆத்தூர் இளங்கோவன் நேரில் சென்று குமரகுருவிடம் சமாதானம் பேசினார். அவரிடமும் தனது இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான் என்று சொல்லியிருக்கிறார் குமரகுரு.

‘2026 தேர்தல்தானே… இதுல நின்னா நீங்க ஜெயிச்சுடுவீங்க. எம்பி ஆனாலும் 2026 லயும் நிக்கலாமே… என்ன தப்பு?’ என்று ஒரு வழியாக சமாதானப்படுத்தி அதன் பிறகே குமரகுருவை நிற்க வைத்திருக்கிறார்கள். குமரகுருவின் நெருங்கிய ஆதரவாளர்களும், ‘அண்ணே… இப்ப எடப்பாடி சொல்றது மாதிரி எம்பி  வேட்பாளராக நில்லுங்க. அப்பதான் 2026 இல நீங்க துணை முதல்வர் வரைக்கும் கேட்க முடியும்’ என்று ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு பொன்முடியிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு இல்லைங்குறது உண்மைதான். அதுமட்டுமல்ல, அந்த அதிருப்தி குமரகுருவுக்கு சாதகமாக இருந்ததும் உண்மைதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி எங்கள் கட்சியினர் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் செயல்வீரர்கள் கூட்டத்திலேயே 45 ஆயிரம் பேரை திரட்டினார் வசந்தம் கார்த்திகேயன். அந்த கூட்டத்தைக் கடந்து மேடைக்கு பொறுப்பு அமைச்சர் எ.வ. வேலு வருவதற்கே இரண்டரை மணி நேரம் ஆனது. அதேபோல இங்கே உதயநிதி வந்தபோதும் பிரம்மாண்டக் கூட்டம் திரண்டது. சேலம் மாவட்ட பகுதிகளிலும் பொறுப்பு அமைச்சர் நேருவின் ஒருங்கிணைப்பில் தீவிரமாக வேலை நடந்தது. இதெல்லாம் பொன்முடி, எஸ்.ஆர்.எஸ். அதிருப்தியை சரிக்கட்டிவிட்டது

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் மோகனுக்கும் குமரகுருவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனால் இந்த முறை குமரகுருவை ‘எதிர்த்து’ அவருக்காக தீவிரமாக வேலை செய்திருக்கிறார்கள் மோகன் தரப்பினர். அதெப்படி அவரை எதிர்த்து அவருக்காக வேலை செய்ய முடியும்?

என்ன காரணம் என்றால்… ‘குமரகுரு ஜெயித்து எம்பியாகிவிட்டால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மோகன் ஜெயித்து மாவட்டத்திலிருந்து அமைச்சராகிவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார். அதனால் குமரகுருவை டெல்லிக்கு அனுப்பி வைப்பதற்காக வேலை செய்திருக்கிறார். கோஷ்டிப் பூசல் கள்ளக்குறிச்சியில் இப்படியும் வெளிப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், கெங்கவல்லி,. ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகள் அதிமுக வசம் இருப்பதால் குமரகுருவுக்கு சாதகம் என்பது பற்றி திமுகவினரிடம் கேட்டபோது,

“2019 தேர்தலின்போதும் இந்த மூன்று தொகுதிகளும் அதிமுகவிடம்தானே இருந்தன. அப்போது திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி 3,99,919 லட்சம் வித்தியாசத்துல ஜெயித்தார். அதுமட்டுமல்ல… 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவினர் பணம் கொடுப்பதற்கு பதிலாக டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டனர்.

ஆனால், ஜெயித்த பிறகு அந்த டோக்கன்களை அப்படியே மறந்துவிட்டனர். அதனால் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதியின் பல இடங்களுக்கு போகவே முடியவில்லை. அதனால் அந்த 3 தொகுதிகளும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்கிறார்கள்.

கூட்டணி பலம் இரு கட்சிகளுக்கும் எப்படி இருந்தன?

திமுகவுக்கு இங்கே சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும் கூட்டணிக் கட்சி விடுதலை சிறுத்தைகள்தான். அவர்களும் தீவிரமாக உழைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு தேமுதிகவின் ஒத்துழைப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது.

பண விநியோகம் கள்ளக்குறிச்சி தொகுதியில் எப்படி?

திமுக சார்பில் தொகுதியிலுள்ள 80% பேருக்கு ஓட்டுக்கு முதலில் 300 ரூபாய், பிறகு 100 ரூபாய் என மொத்தம் 400 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பண விநியோகத்தில் செந்தில்பாலாஜியின் மெக்கானிசத்தை கடைபிடித்திருக்கிறார் கள்ளக்குறிச்சி தெற்கு மாசெவும் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன்.

அதாவது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பு கட்சிக்காரர்களிடம் ஒப்படைக்காமல், அதற்கென ஒரு ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே தொகுதி முழுவதும் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த டெலிவரி டீமுக்கு சம்பளமே ஒரு கோடி ரூபாய் வரை ஆகியிருக்கும் என்கிறார்கள்.

இந்த டெக்னிக் நன்றாக ஒர்க் அவுட் ஆகி பணம் இடையில் எங்கும் அபேஸ் செய்யப்படாமல் கடைசி வரைக்கும் சென்று சேர்ந்துவிட்டது என்கிறார்கள் திமுகவில். அதிமுக தரப்பில் குமரகுரு வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபோதே, ‘அவர் பெரும் பணக்காரரு… நல்லா செலவு செய்வாரு’ என்ற பேச்சு எழுந்தது.

இந்த வகையில் அதிமுக தரப்பில் தொகுதியின் 60 சதவிகிதம் பேருக்கு ஓட்டுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஆங்காங்கே உள்ள கட்சி நிர்வாகிகளையே பயன்படுத்தினார் குமரகுரு.

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக வேட்பாளரும் மாசெவுமான குமரகுரு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, ‘ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நாம ஜெயிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். இதையே கட்சி நிர்வாகிகளுடமும் நம்பிக்கையாக சொல்லியிருக்கிறார் குமரகுரு.

திமுக தரப்பில் தேர்தல் முடிந்த பிறகு பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, வேட்பாளர் மலையரசன், மாசெ வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்கள்.

அப்போது, ‘எவ்வளவு வித்தியாசம் வரும்?’ என்று ஸ்டாலின் கேட்க, ‘ரெண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல நாம் ஜெயிப்போம்’ என்று வசந்தம் கார்த்திகேயன் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு, ‘வாழ்த்துகள்’ தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பத்மபூஷன் விருதுடன் சென்னை வந்த பிரேமலதா… ரோடு ஷோவுக்கு தடை…அதகளமான ஏர்போர்ட்!

குட் நியூஸ் மக்களே! – 11 மாவட்டங்களில் இன்று கனமழை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share