தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை (Annamalai) தனிக் கட்சி தொடங்கியிருப்பதை விசிகவின் துணை பொதுச்செயலாளரும் சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு (Vanni Arasu) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளதாவது:இந்திய காவல் பணி அதிகாரியாக இருந்த அண்ணாமலை , பாஜகவில் 2020ல் இணைந்து அதன் மாநில தலைவராக டெல்லி தலைமையால் நியமிக்கப்பட்டார்.
2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலை அண்ணாமலை தலைமையில் பாஜக சந்தித்தது. அவரது தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க ‘வெற்றியை’ பாஜகவால் பதிவு செய்ய முடியவில்லை.
2023ஆம் ஆண்டு தனது திராவிட எதிர்ப்பு பேச்சுகள் மூலம் பாஜக – அதிமுக கூட்டணியை அண்ணாமலை உடைத்தார் என்று ஒரு செய்தி கட்டமைக்கப்பட்டது. அதாவது டெல்லி தலைமையை மீறி அண்ணாமலை தனியாக செயல்பட்டார், டெல்லியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
பின்னர், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே பாஜக – அதிமுக கூட்டணியை டெல்லியில் நேரடியாக அறிவித்தார் அமித்ஷா. அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி ‘பறிக்கப்பட்டு’, சாதாரண தொகுதி பொறுப்பு தரப்பட்டதாகவும், அதையும் அண்ணாமலை ஏற்கவில்லை என்றும் செய்தி கட்டமைக்கப்பட்டது.
இப்போது பாஜகவிலிருந்து விலகும் முடிவை டிசம்பர் 2025-லேயே எடுத்துவிட்டதாகவும், தேர்தல் வரை காத்திருக்கும்படி தலைமை சொன்னதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நீண்ட நெடிய தொடர் தற்போது புதிய கட்டத்துக்கு செல்கிறது. அதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லையாம், அதனால் தமிழர் கலாச்சாரத்தில் வேரூன்றிய அரசியலை முன்னெடுக்க போகிறாராம் திரு. அண்ணாமலை.
டெல்லி பாஜக தலைமையால் இயக்கப்படும் இந்த நெடுத்தொடர் அவர்களுக்கு புதிது இல்லை. குஜராத் முன்னாள் பாஜக முதல்வர் கேசுபாய் படேல், மோடி – அமித்ஷா ஆதிக்கத்தை எதிர்ப்பதாக 2012ல் குஜராத் பரிவர்த்தன் பார்ட்டி என்று தொடங்கி, பின்னர் 2014ல் மோடிக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட முக்கிய சங்பரிவார் நடவடிக்கைகளில் முன்னின்று ஈடுபட்ட உமா பாரதி, அத்வானி உடன் சண்டை என்று சொல்லி 2006ஆம் ஆண்டு பாரதிய ஜன சக்தி பார்ட்டி என்று தொடங்கி, 2011ல் கட்சியை பாஜகவில் இணைத்து, 2014ல் மோடி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 90களின் மோடியாக வலம்வந்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், 2010ல் ஜன் கிராந்தி பார்ட்டி தொடங்கி, 2014ல் மீண்டும் பாஜகவில் இணைந்துவிட்டார்.
தென்னிந்தியாவில் இந்த தொடர் கதையின் முதல் நாயகன் கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தான். 2012ல் ஊழல் குற்றச்சாட்டில் முதல்வர் பதவியை இழந்ததும், கர்நாடகா ஜனதா பக்க்ஷா என்ற கட்சியை ஆரவாரமாக தொடங்கினார். 2014ல் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார். அதே எடியூரப்பாவை 2018ல் மீண்டும் முதலமைச்சராக அமர வைத்தது பாஜக.
அப்பாவி குழந்தையின் மரணத்தில் ‘மதமாற்ற அரசியல்’, கந்தசஷ்டி கவசம், வேல் யாத்திரை, திருப்பரங்குன்றம் தீபம் என்று தமிழர்களை மதத்தின் பெயரால் துண்டாடும் திட்டத்துடன் வகைவகையான கலவர அரசியலை செய்து பார்த்தது டெல்லி பாஜக தலைமை. ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் ‘செல்ஃப்’ எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் இடம் என்னவென்பதை 2021, 2024 மற்றும் 2026 தேர்தல்களில் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர். இனி எப்போதும் பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
மரு வைத்தாலே புதிய கதாபாத்திரம் என்பதாக திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை காட்சி வரும், அது போல தான் இருக்கிறது அண்ணாமலையின் அறிவிப்பு. பாஜக டெல்லி தலைமையால் தமிழ்நாட்டுக்குள் உருமாற்றி அனுப்பப்படும் ‘Trojan Horse’ தான் அண்ணாமலை. பாஜக சனாதனிகளின் சதியை தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட நடிகர் வடிவேலு தான் இந்த சூழலையும் எளிதாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறார்..
எல்லாம் சரி, ஆனா கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே Bro! இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
