உலக அளவில் பட்டாசு ஏற்றுமதியில் சீனாவுக்கு இணையாக தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசுகளையும் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்ல புதிய ஏற்றுமதிக் கொள்கை வகுக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “சிவகாசியில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பும், தொழிலாளர்களின் அசாத்திய திறமையும் இருந்தபோதிலும், இன்னும் முழுமையான அளவில் சட்டப்பூர்வமான ஏற்றுமதி நடைமுறைகள் சாத்தியப்படாமல் உள்ளது. இதனைச் சரிசெய்யும் வகையில், சட்டரீதியாக உள்ள வழிமுறைகளை ஆராய்ந்து, முறையான ஏற்றுமதிக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி வாய்ப்புகளும் சாதகமான சூழல்களும்:
விருதுநகர் மாவட்டத்திற்கு அருகில் சர்வதேச தரத்திலான துறைமுகங்கள் இருப்பதால், இங்கிருந்து எளிதாக வெளிநாடுகளுக்குப் பட்டாசுகளைக் கொண்டு சேர்க்க முடியும். அண்மையில் கொரியா சென்றிருந்த போது சிவகாசி பட்டாசுகள் குறித்து விளக்கப்பட்டதாகவும், அதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் மிகுந்த வரவேற்பு அளித்து முறையான அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் போலந்து போன்ற நாடுகளில் இருந்து தனிநபர் ஒருவரே சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் சிவகாசிக்கு அதிகமாகவே உள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை:
இந்த ஏற்றுமதித் திட்டங்கள் முறையாகச் செயல்படும் பட்சத்தில், விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார தரம் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பல மடங்கு உயரும். தற்போது பொருளாதாரத்தில் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் சிவகாசியை அடுத்த உச்சத்திற்கு உயர்த்த இது பெரிய வாய்ப்பாக அமையும்.
எனவே,அண்ணன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஏற்றுமதிக் கொள்கைக்கான சட்ட நடைமுறைகளை முழுமையாகப் படித்து, சிவகாசி பட்டாசை உலக நாடுகளுக்குப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
