ADVERTISEMENT

எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதா சண்டை ; இன்னும் குறையாத சுவாரஸ்யம்

Published On:

| By Minnambalam Desk

MGR - MR Radha fight; still interesting.

வரும் ஜனவரி 12 வந்தால் எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர் துப்பாக்கி சூடு நடந்த அறுபதாவது ஆண்டு துவங்கி விடும் கடந்துவிட்டன.

” என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்து வந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?” என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.

ADVERTISEMENT

”அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய் விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ என்றார் சந்திரசேகரன்.

துப்பாக்கி சூட்டுக்கு பல காரணம் சொல்லப்பட்டது . பின் வரும் விஷயங்களும் அதற்கு உண்டு

ADVERTISEMENT

தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்’ எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்’ என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே… வெளிய போய் மேடை போட்டு பேசு’ என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேச வைத்தார் சின்னப்பா.

‘எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்’ என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு,.வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது , “லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, எம் ஆர் ராதா, “லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?’ எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

ஒருமுறை மலேசியாவுக்குப் போயிருந்த எம் ஆர் ராதா அங்கே ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது.

”அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்” என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, அதையே வைத்து பேச்சைத் துவங்கினார் எம் ஆர் ராதா.

‘’எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்’. என்றார் . கோஷம் போட வந்த கூட்டம் அமைதியானது

மீண்டும் எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். அப்போதுகூட,’ உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்’ என்றார் ராதா

-ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share