கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது அக்கட்சியை பார்க்க ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த இரண்டு விசாரணை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்ஐடி குழுவை அமைத்தது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அதே சமயம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரோஸ்தகி தலைமையில் சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
அதன்படி சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் போலீசார் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
மீண்டும் எஸ் ஐ டி விசாரணையை தொடர அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், மாநில அரசு, உள்ளூர் காவல்துறை மற்றும் மாநில சிறப்பு விசாரணைக் குழு “நியாயமான, முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை” நடத்துவதற்கு முழு தகுதியுடையவை” என்று தெரிவித்துள்ளது.
சிபிஐக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மாநில சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் காரணம் காட்டியதில், வழக்கில் இருந்த “அரசியல் உள்நோக்கங்கள்“ குறிப்பிட்டுள்ளது.
வெறும் அரசியல் பின்னணிகள் அல்லது குற்றச்சாட்டுகள் மட்டுமே விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது. சிபிஐ விசாரணைக்கு “அரசியல் உள்நோக்கங்கள்” போதுமான அடிப்படையாக எடுத்துக்கொண்டால், அது “மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கான வாயில்கள்” திறக்கப்படும்.
மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்யும் ஒரு கூட்டாட்சி அரசியலில் அரசியல் உள்நோக்கம் என்ற குற்றச்சாட்டு பொதுவானது தான்.
இந்த இடைக்கால உத்தரவு அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு வழக்கையும் மாநில அதிகார வரம்பில் இருந்து நீக்குவதற்கு ஒரு ஆபத்தான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
அக்டோபர் 13ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தை சாராத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இதில் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இயல்பாகவே பாரபட்சமாக செயல்படுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலான இந்த உத்தரவு ஐபிஎஸ் சேவையின் நேர்மையை அவமதிப்பதாகும்.
அரசின் விரிவான வாதங்களை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக அரசு அதிகாரிகள் பேட்டி அளித்ததை காரணம் காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. சட்டம் ஒழுங்கு மாநில பட்டியலில் இருக்கிறது. கூட்ட நெரிசல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.
எனவே சிபிஐ விசாரணையை ரத்து செய்து எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
